மத்திய நெடுஞ்சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி | கோப்புப்படம் 
இந்தியா

ஹாரன்களில் இந்திய இசைக்கருவிகள் இசை: ஆம்புலன்ஸ் சைரன் காதுக்கு இனிமையாக மாற்றப்படும்: நிதின் கட்கரி திட்டம்

செய்திப்பிரிவு

வாகனங்களில் இந்திய இசைக் கருவிகளின் இசை மட்டுேம இருக்குமாறு விரைவில் சட்டம் கொண்டுவர திட்டமிட்டு வருவதாக மத்திய நெடுஞ்சாலைப் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

நாசிக் நகரில் நெடுஞ்சாலைக்கான அடிக்கல் நாட்டுவிழா நிகழ்ச்சி ஒன்றில் நேற்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பங்கேற்றார். அதில் அவர் பேசியதாவது:

இந்தியாவில் ஓடும் வாகனங்களில் பயன்படுத்தப்படும் ஹாரன்களில் இனிமேல் இந்திய இசைக் கருவிகளின் இசை மட்டுமே இருக்குமாறு விரைவில் சட்டம் இயற்ற திட்டமிட்டு வருகிறோம். அதுமட்டுமல்லாமல் போலீஸார் வாகனங்கள், ஆம்புலன்களில் பயன்படுத்தப்படும் சைரன் ஒலி, காதுகளுக்கு இனிமையாகஇருக்குமாறு மாற்றவும் திட்டமிட்டுள்ளோம். அதாவது ஆல் இந்தியா ரேடியோவில் உள்ள இசை போன்று இருக்குமாறு ஆய்வு செய்து வருகிறோம்

இந்திய வானொலி காலையில் ஒலிபரப்பைத் தொடங்கும்போது காதுகளுக்கு இனிமையான இசை ஒலிக்கப்படும். அந்த இசைபோன்று ஆம்புலன்ஸ் சைரன் இருக்குமாறு யோசித்துவருகிறேன். தற்போதுள்ள சைரன் ஒலியும், அமைச்சர்கள் அதிகாரிகள் செல்லும்போது ஒலிக்கவிடும் சைரன் ஒலியும் வெறுப்பாக இருக்கிறது.

இந்திய இசைக்கருவிகளான புல்லாங்குழல், வயலின், மவுத்ஆர்கன், ஹார்மோனியம் ஆகியவற்றின் இசை மூலம் ஹாரன் ஒலி அமைக்குமாறு ஆய்வு செய்து வருகிறோம். இதற்காக விரைவில் சட்டமும் இயற்ற திட்டமிட்டுள்ளோம்.

ஒவ்வோர் ஆண்டும் இந்தியாவில் 5 லட்சம் சாலை விபத்துகள் நடக்கின்றன. இதில் 1.5 லட்சம் மக்கள் விபத்துகளால் காயமடைகின்றனர். இந்த விபத்துகளால் ஜிடிபியில் 3 சதவீதத்தை நாம் இழக்கிறோம்.

விபத்துகளைப் பொறுத்தவரை மும்பை-புனே தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகள் 50 சதவீதம் குறைந்துவிட்டது. தமிழக அரசு விபத்துகளின் எண்ணிக்கையும், உயிரிழப்பு எண்ணிக்கையையும் 50 சதவீதம் குறைத்துவிட்டது.

மகாராஷ்டிராவில் இதை இன்னும் எட்டமுடியவில்லை. விபத்துகளின் போது உயிரிழப்பு வீதம் என்பது மகாராஷ்டிராவில் அதிகமாக இருக்கிறது. வாகனங்களில் 6 ஏர்-பேக் கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது.

இவ்வாறு நிதின் கட்கரி தெரிவித்தார்.

SCROLL FOR NEXT