இந்தியா

மோடி சார், எஃப்ஐஆர் பதியாமலேயே உங்கள் அரசு என்னை 28 மணி நேரமாக சிறைவைத்துள்ளது: பிரியங்கா காந்தி ட்வீட்

ஏஎன்ஐ

"நரேந்திர மோடி சார், உங்கள் அரசு என்னை எஃப்ஐஆர் கூட பதிவு செய்யாமல் 28 மணி நேரமாக என்னை சிறை வைத்துள்ளது" என்று பிரியங்கா காந்தி ட்வீட் செய்துள்ளார்.

லக்கிம்பூர் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறச் சென்ற காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று சீதாபூரில் அரசு விடுதியில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார். இதுவரை அவர் விடுவிக்கப்படவில்லை.

இந்நிலையில், இது குறித்து பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், "நரேந்திர மோடி சார், உங்கள் அரசு என்னை எஃப்ஐஆர் கூட பதிவு செய்யாமல் 28 மணி நேரமாக என்னை சிறை வைத்துள்ளது. ஆனால், விவசாயிகளை வாகனம் ஏற்றிக் கொலை செய்தவர்கள் இதுவரை கைது செய்யப்பட்டவில்லை" என்று பதிவிட்டுள்ளார்.

அமைச்சரை நீக்காவிட்டால் ஆட்சியில் இருக்காதீர்கள்:

மேலும் தனியார் தொலைக்காட்சிக்கு பிரியங்கா அளித்த பேட்டியில், "மோடி ஜி நீங்கள் ஏன் லக்னோவுக்கு வருகிறீர்கள். சுதந்திரத்தை கொண்டாடவா? சுதந்திரத்தை நமக்குக் கொடுத்தது விவசாயிகள் அல்லவா? அவர்களை துயரத்தில் ஆழ்த்திவிட்டு கொண்டாட்டங்கள் தேவையா? அஜய் மிஸ்ராவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குங்கள். அவர் இன்னமும் அமைச்சராகத் தொடர்வதற்கு என்ன தகுதி இருக்கிறது. என்னைப் போன்றோரை கைது செய்துவிட்டு, மிகவும் கொடூரமான குற்றத்தை செய்த அமைச்சரை நீக்கவில்லையே" என்று கேள்வி எழுப்பியுள்ளார். அமைச்சரை நீக்காவிட்டால் ஆட்சியில் இருக்க நீங்கள் தகுதியவற்றவர்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

போலீஸாருடன் வாக்குவாதம்:

முன்னதாக, லக்கிம்பூர் கேரி பகுதியில் நடந்த போராட்டத்தில் நடந்த வன்முறையில் 8 விவசாயிகள் உயிரிழந்தனர். அவர்களின் குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் தெரிவிக்க காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, காங்கிரஸ் மூத்த நிர்வாகி தீபேந்தர் ஹூடா உள்ளிட்ட பலர் லக்கிம்பூருக்கு சென்றனர்.

ஆனால், பிரியங்கா காந்தி சென்ற வாகனத்தை சீதாப்பூர் பகுதியிலேயே தடுத்து நிறுத்திய போலீஸார், அவரைத் தடுத்து அழைத்துச் சென்றனர். போலீஸாருடன் பிரியங்கா காந்தி வாக்குவாதம் செய்த வீடியோவை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் பிரியங்கா, “என்னை எதற்காகக் தள்ளிக்கொண்டு சென்று போலீஸார் வாகனத்தில் ஏற்ற முயல்கிறீர்கள். என்னைத் தாக்க முயல்கிறீர்கள், என்னைக் கடத்த முயல்கிறீர்களா, என்னைத் துன்புறுத்தி, காயம் ஏற்படுத்த முயல்கிறீர்களா? நான் அனைத்தையும் புரிந்துகொண்டேன்.

உங்கள் உயர் அதிகாரிகள், அமைச்சர்களிடம் வாரண்ட் பெற்று வாருங்கள். முதலில் ஒரு பெண்ணிடம் எவ்வாறு நடந்து கொள்வது எனக் கற்றுக்கொள்ளுங்கள்" எனக் காட்டமாக போலீஸாருடன் வாக்குவாதம் செய்வது இடம்பெற்றிருந்தது. இது நாடு முழுவதும் காங்கிரஸார் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

SCROLL FOR NEXT