ரியல் எஸ்டேட் துறையில் ஈடுபட்டுள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் வீடு வாங்குபவர்கள் இடையிலான ஒப்பந்த முறையை ஒழுங்குபடுத்தி நாடு முழுவதும் ஒரே மாதிரியான ஒப்பந்த முறையை உருவாக்குவது தற்போதைய சூழலில் நாட்டிற்கு அவசியமானது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ரியல் எஸ்டேட் துறையில் வீடு வாங்குபவர்களுடன் செய்துகொள்ளும் ஒப்பந்தத்தில் கட்டுமான நிறுவனங்கள் பல பிரிவுகளை சேர்க்கின்றன. மேலும் இந்த ஒப்பந்தத்தின் அம்சங்கள் நிறுவனத்துக்கு நிறுவனம் வேறுபடுகிறது. அந்தப் பிரிவுகளை சாதாரண வாடிக்கையாளர்கள் புரிந்துகொள்வது சிரமமாக உள்ளது.
இதனால், வாடிக்கையாளர்கள் பல சமயங்களில் ஏமாற்றப்படுகின் றனர். மன ரீதியாக, உடல் ரீதியாக மற்றும் பொருளாதார ரீதியாக வாடிக்கையாளர்கள் கடும் இழப்பைச் சந்திக்கின்றனர்.
இந்நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வீடு வாங்குபவர்கள் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில், வீடு வாங்குபவர்கள் நலனை பாதுகாக்கும் பொருட்டு, கட்டுமான நிறுவனங்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் இடையிலான ஒப்பந்தத்தை வரையறைக்கு உட்படுத்தி, அரசே ஒரு மாதிரி ஒப்பந்தத்தை உருவாக்கி அனைத்து மாநிலங்களையும் பின்பற்றுமாறு உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
அந்த மனுவை விசாரித்த டி. ஓய். சந்திரசூட் மற்றும் பி.வி. நாகரத்னா ஆகிய நீதிபதிகள் அடங்கிய அமர்வு, பில்டர் - வீடுவாங்குபவர் இடையில் மாதிரி ஒப்பந்தத்தை உருவாக்க வேண்டியது அவசியம் என்று கூறி, இது தொடர்பாக மத்திய அரசின் விளக்கத்தையும் கோரியுள்ளது.