எல்லையில் அவ்வப்போது சீன ராணுவம் அத்துமீறுவதாகவும் அதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படுவதாகவும் இந்தோ-திபெத் எல்லைப் படை (ஐடிபிபி) இயக்குநர் சஞ்சய் அரோரா தெரிவித்துள்ளார்.
ஐடிபிபி படையின் 4-வது கட்ட சைக்கிள் பேரணியை, அதன் இயக்குநர் ஜெனரல் சஞ்சய் அரோரா டெல்லியிலிருந்து நேற்று தொடங்கி வைத்தார். இந்தப் பேரணி சுமார் 2,700 கி.மீ. பயணித்து வரும் 31-ம் தேதி குஜராத்தின் கெவதியாவை சென்றடையும். அன்றைய தினம் அங்கு நடைபெறும் தேசிய ஒற்றுமை தின பேரணியில் இந்த வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் மாதம் சீன ராணுவத்தின் 100-க்கும் மேற்பட்ட வீரர்கள் அத்துமீறி இந்திய பகுதிக்குள் நுழைய முயன்றதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது. இதுகுறித்து சைக்கிள் பேரணியை தொடங்கி வைத்த சஞ்சய் அரோரா கூறியதாவது:
ஐடிபிபி நம் நாட்டு எல்லையை பாதுகாக்கும் படை ஆகும். எல்லை ஒருமைப்பாட்டை நிர்வகிக்கும் பணி எங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே பலமுறை எங்கள் திறமையை வெளிப்படுத்தி உள்ளோம். எங்கள் படையின் தயார் நிலை திருப்தியளிக்கிறது. எல்லையில் அவ்வப்போது சீன ராணுவம் அத்து மீறி நுழைய முயல்வது உண்மைதான். ஆனால் உடனுக்குடன் தகுந்த பதிலடி கொடுத்து அதை முறியடித்து வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.- பிடிஐ