இந்தியா

மேகேதாட்டுவில் அணை கட்டும் பணிகள்: கர்நாடக முதல்வர் பசவராஜ் உறுதி

செய்திப்பிரிவு

காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் விரைவில் அணை கட்டும் பணிகள் தொடங்கப்படும் என கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

காவிரி ஆற்றின் குறுக்கே தமிழக எல்லையை ஒட்டியுள்ள மேகேதாட்டு என்ற இடத்தில் க‌ர்நாடக அரசு ரூ.9 ஆயிரம் கோடியில் புதிய அணை கட்ட முடிவெடுத்துள்ளது. இதுதொடர்பாக அந்த இடத்தில் ஆய்வு செய்து மத்திய அரசிடம் விரிவான திட்ட அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. இந்த திட்டத்தினால் தமிழ்நாட்டுக்கு வரும் காவிரி நீரில் சிக்கல் ஏற்படுவதுடன், உபரி நீர் கிடைக்காமல் போகும் என்பதால் தமிழ்நாடு அரசு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை பெல்லாரியில் ஞாயிற்றுக்கிழமை மாலை செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மேகேதாட்டுவில் திட்டமிட்டவாறு ரூ.9 ஆயிரம் கோடி செலவில் அணை கட்டுவது உறுதி. கர்நாடக அரசின் இந்த நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை. மத்திய அரசின் உதவியுடன் இந்த திட்டத்தை செயல்படுத்த முயற்சித்து வருகிறோம். சட்ட ரீதியான போராட்டத்தையும் கர்நாடக அரசு மேற்கொண்டு வருகிறது. காவிரி நீர் கர்நாடகாவில் உற்பத்தி ஆகிறது. காவிரி நீரை தமிழக அரசு கொடுக்கவில்லை. கர்நாடகாதான் காவிரி நீரை கொடுக்கிறது. எனவே மேகேதாட்டு திட்டம் கர்நாடகாவின் கையில் இருக்கிறது. இந்த திட்டத்தை பொறுத்தவரை தமிழ்நாடு அரசின் கையில் எதுவும் இல்லை. மேகேதாட்டு திட்டத்தை அவர்களால் தடுக்க முடியாது. தமிழ்நாடு அரசு எந்த முடிவு எடுத்தாலும் அதற்கு எவ்வித அர்த்தமும் இல்லை.

தமிழ்நாடு அரசும், அரசியல்வாதிகளும் அரசியல் சுய‌லாபத்துக்காக மேகேதாட்டு விவகாரத்தை வைத்து தமிழ்நாடு மக்களை திசை திருப்பி வருகின்றனர். இந்த உண்மை அங்குள்ள மக்களுக்கும் விவசாயிகளுக்கும் தெரியும். இந்த எதிர்ப்பை சட்ட ரீதியாக எதிர்க்கொண்டு, 100 சதவீதம் மேகேதாட்டு திட்டத்தை நிறைவேற்றுவோம்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.

SCROLL FOR NEXT