லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்துக்காக நான் உளவு பார்த்தது, சிகாகோவில் உள்ள நண்பர் தஹாவூர் ரானாவுக்கு தெரியும் என்று தீவிரவாதி டேவிட் ஹெட்லி கூறியிருக்கிறார்.
மும்பை தொடர் குண்டு வெடிப்பில் முக்கிய குற்றவாளி யான பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த அமெரிக்கர் டேவிட் ஹெட்லியை (55) அமெரிக்க புலனாய்வு துறையினர் கைது செய்தனர். அங்கு அவர் மீதான வழக்கில் 35 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதன்படி அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் ஹெட்லி அப்ரூவராக மாறி சிறையில் இருந்தபடியே வீடியோ கான்பரன்சிங் மூலம் மும்பை நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தார். அப்போது பல்வேறு திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டார்.
இந்நிலையில், 2008-ம் ஆண்டு மும்பை தாக்குதலுக்கு சதித் திட்டம் தீட்டிய முக்கிய குற்றவாளி அபு ஜூண்டால் சார்பில் அவரது வழக்கறிஞர் அப்துல் வகாப் கான் குறுக்கு விசாரணை நடத்த நீதிமன்றத்தில் அனுமதி பெற்றார். அதன்படி மும்பை செஷன்ஸ் நீதிபதி ஜி.ஏ.சனாப் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணை நேற்று தொடங்கியது.
அமெரிக்க சிறையில் உள்ள ஹெட்லியிடம், வீடியோ கான்பரன்ஸ் மூலம் வழக்கறிஞர் அப்துல் வகாப் கான் குறுக்கு விசாரணை நடத்தினார். அப்போது, சிகாகோவில் குடியேற்ற துறை அனுமதி பெற்று தரும் நிறுவனம் நடத்தி வரும் பாகிஸ்தானை சேர்ந்த நண்பர் தஹாவூர் ரானாவை பற்றி அப்துல் வகாப் கான் கேட்டார்.
அதற்கு ஹெட்லி கூறியதாவது:
எனது நண்பர் ரானா. நான் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்தில் இருக்கிறேன் என்பது ரானாவுக்கு தெரியும். லஷ்கர் தீவிரவாதிகளுக்கு அளிக்கப்பட்ட பயிற்சி குறித்து நான் ரானாவிடம் கூறியிருக்கிறேன். இவை எல்லாம் மும்பை தாக்குதல் நடப்பதற்கு நான்கைந்து மாதங்களுக்கு முன்பே அவருக்கு தெரியும்.
ஆனால், லஷ்கர் இயக்கத் துக்காக நான் உளவு பார்ப்பதை அவர் விரும்பவில்லை. கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். மும்பையில் உள்ள அவரது அலுவலகத்தை நான் தொடர்ந்து பயன்படுத்துவதை ரானா விரும்ப வில்லை. அதனால் 2008 ஜூலையில் வெளியேறிவிட்டேன்.இவ்வாறு டேவிட் ஹெட்லி கூறினார்.
மனைவி இருக்கும் இடத்தை சொல்ல மறுத்த ஹெட்லி
ஹெட்லியின் மனைவி ஷாசியா பற்றி வழக்கறிஞர் கேள்வி எழுப்பினார். அதற்கு ஹெட்லி பதில் அளிக்க மறுத்துவிட்டார். ‘‘ஷாசியா இன்னும் எனது சட்டப்பூர்வமான மனைவிதான். இப்போதைக்கு அவர் எங்கிருக்கிறார் என்பதை சொல்ல மாட்டேன். என் மனைவி பற்றிய எந்தக் கேள்விக்கும் நான் பதில் அளிக்க விரும்பவில்லை’’ என்றார்.
ஹெட்லி மேலும் கூறும்போது, ‘‘என் மனைவி இந்தியாவுக்கு ஒரு முறை கூட சென்றதில்லை. நான் லஷ்கர் இயக்கத்தில் இருப்பதை அவரிடமும் கூறியிருக்கிறேன்’’ என்றார்.
‘‘தீவிரவாத இயக்கத்தில் இருப்பது தெரிந்ததும் உங்கள் மனைவி எப்படி நடந்து கொண்டார்’’ என்று வழக்கறிஞர் மீண்டும் கேள்வி கேட்டார். அதற்கு, ‘‘அது எனக்கும் என் மனைவிக்கும் இடையில் உள்ள அந்தரங்க விஷயம். அவர் எதிர்ப்பு தெரிவித்தாரா, இல்லையா, அவர் என்ன சொன்னார் என்பதை எல்லாம் வெளிப்படுத்த மாட்டேன்’’ என்றார்.
ஆனால், ‘‘தாவூத் கிலானி என்ற எனது உண்மையான பெயரை, ‘டேவிட் கோல்மேன் ஹெட்லி’ என்று மாற்றிக் கொள்ள போவதை அவர் அறிவார்’’ என்று ஹெட்லி கூறினார். தொடர்ந்து அவரது மனைவியை பற்றியே பல கேள்விகளை வழக்கறிஞர் கேட்டார். அதற்கு அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞர் உஜ்வல் நிகாம் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ‘‘இந்திய சாட்சி கள் சட்டம் 122-வது பிரிவின்படி கணவன் - மனைவிக்கு இடையில் நிகழ்ந்த உரையாடல் களை வெளிப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை’’ என்று உஜ்வல் நிகாம் கூறினார்.