உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரியில் நடந்த வன்முறை சம்பவம் பஞ்சாபில் மீண்டும் விவசாயிகள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரி அருகே உள்ள மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா, உ.பி. துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா, பாஜக தலைவர்கள் ஒரு நிகழ்ச்சியில் நேற்று பங்கேற்கச் சென்றபோது அவர்களுக்கு விவசாயிகள் கருப்புக் கொடி காட்டினர்.
அப்போது விவசாயிகளுக்கும், பாஜக தொண்டர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டு வன்முறையாக மாறியது. துணை முதல்வர் மற்றும் மத்திய அமைச்சர் ஆகியோருடன் வந்த வாகனம் திடீரென விவசாயிகள் கூட்டத்திற்குள் புகுந்தது. இதில் ஏராளமான விவசாயிகள் காயமடைந்தனர். இந்த விபத்தில் 4 விவசாயிகள் உள்பட 8 பேர் உயிரிழந்த நிலையில், 8 விவசாயிகள் படுகாயம் அடைந்தனர்.
இந்நிலையில் லக்கிம்பூர் கெரி வன்முறை சம்பவத்தை தொடர்ந்து பஞ்சாபில் மீண்டும் விவசாயிகள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. சம்பவத்தை கேள்விப்பட்டு மாநிலம் முழுவதும் விவசாயிகள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
மத்திய அரசால் நிறைவேற்றப்பட்ட மூன்று விவசாய சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லியின் எல்லையில் பல மாதங்களாக பஞ்சாப் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் போராட்டம் முடிவுக்கு வரவில்லை. தற்போது உ.பி. விவசாயிகள் மீதான வன்முறை சம்பவத்துக்கு பிறகு போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
இதனால் பஞ்சாப் அரசியல் கட்சிகளும் தீவிரமாக களத்தில் குதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சண்டிகரில் சிரோமணி அகாலி தளம் தலைவர் சுக்பீர் சிங் பாதல், ஜலந்தரில் இன்று நடைபெறுவதாக இருந்த கட்சி நிகழ்ச்சியை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளார்.
அக்கட்சியின் உயர்மட்ட முடிவெடுக்கும் அமைப்பான நிர்வாக குழுவின் கூட்டம் நாளை கூடி அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கிறது.
லக்கிம்பூரில் 4 விவசாயிகள் கொல்லப்பட்டதற்கு பாதல் கண்டனம் தெரிவித்துள்ளார்.
லூதியானாவில் நடந்த கழ்ச்சியின் போது பேசிய பாதல் கூறுகையில், குற்றவாளிகளுக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 302 ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும், மேலும் உயர்மட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
SAD பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை (NDA) கடந்த ஆண்டு மூன்று பண்ணைச் சட்டங்களை நிறைவேற்றிய பிறகு வெளியேறியது. அப்போதிருந்து, அது விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவளித்து வருகிறது.
லக்கிம்பூர் கெரி வன்முறையைக் கண்டித்து பஞ்சாப் முழுவதும் விவசாய அமைப்புகளின் அழைப்பின் பேரில் பல போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.