உ.பி. வன்முறையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தைக் காணச் சென்ற காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி காவலர்களுடன் வாதிட்ட துணிச்சலைக் கண்டு அவர்கள் அதிர்ந்துபோனதாகக் கூறியுள்ளார் ராகுல் காந்தி.
உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் நேற்று (ஞாயிற்றுக் கிழமை) மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் காரில் சென்றபோது விவசாயிகள் கறுப்புக் கொடி காட்ட முயற்சித்துள்ளனர்.அப்போது விவசாயிகள் மீது அமைச்சரின் மகன் காரை ஏற்றியதாகக் கூறப்படுகிறது. இதில் 4 விவசாயிகள் உயிரிழந்ததாக சம்யுக்தா கிசான் மோச்சா அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
அதேபோல், போராட்டக்காரர்கள் நடத்திய தாக்குதலில் பாஜகவினர் உள்பட 4 பேர் உயிரிழந்ததாக அமைச்சர் அஜய் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த வன்முறையில் பத்திரிகையாளர் ஒருவர் உயிரிழந்ந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், லக்கிம்பூரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்க்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்றிரவு உத்தரப் பிரதேசம் லக்கிம்பூரில் உள்ள கேரி பகுதிக்குச் செல்ல முயன்ற பிரியங்கா காந்தியை போலீஸார் சீதாபூரில் தடுத்து நிறுத்தினர். அவரை அங்குள்ள விடுதி ஒன்றில் தடுப்புக் காவலில் வைத்துள்ளனர்.
இது குறித்து போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பிரியங்கா, போலீஸார் தன்னை ஒரு குற்றவாளி போல் நடத்துவதாகக் கூறினார். அவர் வாரண்ட் எங்கே எனக் கேட்டு போலீஸாருடன் வாக்குவாதம் செய்த வீடியோ வைரலானது.
இது குறித்து, காங்கிரஸ் எம்.பியும், முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், "பிரியங்கா, நீங்கள் பின்வாங்கமாட்டீர்கள் என எனக்குத் தெரியும். உங்களின் துணிச்சலால் அவர்கள் அதிர்ந்துபோயுள்ளனர். நீதிக்காக நீங்கள் முன்னெடுத்துள்ள அஹிம்சைவழிப் போராட்டம் வெற்றி பெற்றும். பயம் என்பதே இல்லை" எனப் பதிவிட்டுள்ளார்.