பிரதிநிதித்துவப் படம் 
இந்தியா

ஆப்கனில் இருந்து வரும் போதைப்பொருட்கள்: அரபிகடலை அச்சுறுத்தும் கடத்தல்?

செய்திப்பிரிவு

ஆப்கானிஸ்தானில் இருந்து கடத்தி வரப்படும் போதைப்பொருட்கள் மும்பை உட்பட அரபிக்கடல் பகுதியில் உள்ள துறைமுகங்கள் வாயிலாக வந்து செல்லுவதுடன் நாட்டின் பல பகுதிகளிலும் விற்பனை செய்யப்படும் தகவல் வெளியாகியுள்ளது.

உலக அளவில் ஹெராயின் அதிகமாக உற்பத்தி செய்யும் நாடு ஆப்கானிஸ்தான். உலக அளவில் 80 முதல் 90 சதவீத உற்பத்தி இங்கிருந்து நடக்கிறது. ஆப்கானிஸ்தான் சமீபத்தில் தலிபான்கள் கட்டுப்பாட்டில் வந்தபின், ஹெராயின் உற்பத்தி அதிகரித்துள்ளது.

இந்தநிலையில் குஜராத் மாநிலம் முந்த்ரா துறைமுகத்தில் ஆப்கானிஸ்தானிலிருந்து கடத்தி வரப்பட்ட 3 டன் ஹெராயின் போதைப் பொருட்கள் இருப்பதாக ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து நடத்திய விசாரணையில் இருவர் கைது செய்யப்பட்டனர். இரு கன்டெய்னர்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

ஒரு கன்டெய்னரில் 2 டன் ஹெராயின் போதைப் பொருளும், மற்றொரு கன்டெய்னரில் ஆயிரம் கிலோவும் இருந்தது. இந்த இரு கன்டெய்னர்களும் ஆப்கானிஸ்தானிலிருந்து ஏற்றப்பட்டுள்ளன.

இந்தப் போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக அகமதாபாத், டெல்லி, சென்னை, காந்திதாம், மாண்டவி உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்த இரு கன்டெய்னர்களிலும் உள்ள ஹெராயின் போதைப் பொருளின் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.19,900 கோடி இருக்கும்.

இந்தக் கடத்தலில் ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு தொடர்பு இருக்கக்கூடும் என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில் இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது.
இதுதொடர்பாக விசாரணை நடந்து கொண்டிருக்கும் நிலையில் மும்பை சுற்றுலா கொகுசு கப்பலில் போதைப் பொருள் விநியோகம் நடந்திருக்கிறது.

மும்பையில் கப்பலில் போதை ஒழிப்புப்பிரிவு போலீஸ் நடத்திய சோதனையில் பல கோடி மதிப்புள்ள போதை பொருள் சிக்கியது. இந்த வழக்கில், பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கானிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போதைப் பொருள் விநியோகத்தில் மும்பையைச் சேர்ந்த பல முக்கிய புள்ளிகளுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர்பாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

SCROLL FOR NEXT