இந்தியாவில் கரோனா தடுப்பூசி போடும் பணி குறித்து மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்று வெளியிட்ட ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
நாடு முழுவதும் 90 கோடி கரோனா தடுப்பூசிகள் என்ற மைல் கல்லை இந்தியா கடந்துள்ளது. முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி, ‘படைவீரர் வெல்லட்டும், விவசாயி வெல்லட்டும்’ (ஜெய் ஜவான், ஜெய் சிசான்) என்ற முழக்கத்தை கொடுத்தார்.
விஞ்ஞானம் வெல்லட்டும்
இத்துடன், விஞ்ஞானம் வெல்லட்டும் (ஜெய் விக்யான்) என்ற முழக்கத்தை முன்னாள் பிரதமர் வாஜ்பாய் சேர்த்தார். தற்போது பிரதமர் மோடி, ஆராய்ச்சி வெல்லட்டும் (ஜெய் அனுசந்தான்) என்ற முழக்கத்தை கொடுத்துள்ளார். ஆராய்ச்சியின் விளைவுதான் இந்த கரோனா தடுப்பூசி மைல்கல்.
இவ்வாறு மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார்.
“அதிக தடுப்பூசி வழங்குவதன் மூலமும், தடுப்பூசி ஒதுக்கீட்டு அளவை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு முன்கூட்டியே தெரிவிப்பதன் மூலமும் தடுப்பூசி பணி வேகப் படுத்தப்பட்டுள்ளது. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் வசம் 5.28 கோடிக்கு மேல் தடுப்பூசி இருப்பில் உள்ளது” என்றும் அமைச்சகம் கூறியுள்ளது.
நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த ஜனவரி 16-ம் தேதி தொடங்கியது. அதனை பரவலாக்கும் புதிய கட்டத்தை மத்திய அரசு கடந்த ஜூன் 21-ம் தேதி தொடங்கியது. இதன் மூலம் தடுப்பூசிகளில் 75 சதவீதத்தை மத்திய அரசு கொள்முதல் செய்து, அதை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறது.