இராக்கில் உள்நாட்டுப் போரால் வன்முறைக்கு உள்ளான பகுதிகளில் பாதுகாப்பின்றி தவித்து நிற்கும் இந்தியர்களில் 16 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, மோசுல் நகரில் கடத்தல்காரர்கள் பிடியில் சிக்கிய 40 இந்தியர்களில் ஒருவர் தப்பியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இராக் நிலவரம் குறித்து வெள்ளிக்கிழமை பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உயர்நிலை ஆய்வுக் கூட்டம் நடந்தது. வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், அமைச்சரவைச் செயலர் அஜித் சேத், வெளியுறவுச் செயலர் சுஜாதா சிங், புலனாய்வு மற்றும் பாதுகாப்பு அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
இதுபற்றி வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் சையது அக்பருதீன் கூறியதாவது: அரசுக்கு கிடைத்த தகவல்கள், உண்மை நிலவரம் அனைத்தும் பரிசீலித்து இராக் நிலவரத்தின் முழு பரிமாணமும் இந்த கூட்டத்தில் அலசப்பட்டது.
இராக்கில் கடத்தல்காரர்கள் பிடியில் சிக்கிய 40 இந்தியர்களில் ஒருவர் தப்பி பாக்தாதில் உள்ள இந்திய தூதரகத்துடன் தொடர்பில் உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடத்தப்பட்ட அனைத்து இந்தியர்களும் பத்திரமாக உள்ளனர். அவர்களை மீட்கும் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண அரசு தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறது.
இராக்கில் இருந்து இந்தியர்கள் வெளியேறினால் எல்லைகளை கடக்க அவர்களை அனுமதிக்குமாறு அண்டை நாடுகளின் அதிகாரிகளிடம் எடுத்துச் சொல்லும்படி இந்திய தூதரகங்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இராக்கில் போர் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் 120 இந்தியர்கள் சிக்கித் தவிப்பதாக தெரியவந்துள்ளது. இவர்களில் திக்ரித்தில் சிக்கியுள்ள 46 நர்ஸ் பணியாளர்களும் கடத்தப்பட்டு தீவிரவாதிகளின் பிடியில் உள்ள 40 பேரும் அடங்குவர். ஏற்கெனவே பைஜி பகுதியில் தவித்த 8 பேர், அன்பார் பகுதியிலிருந்து 8 பேர் என மொத்தம் 16 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் பாக்தாதிலிருந்து தாயகம் புறப்படுகிறார்கள்.
இவ்வாறு அக்பருதீன் தெரிவித்தார்.
தீவிரவாதிகளுடன் பேச்சு நடத்தப்படுகிறதா என்று கேட்டதற்கு, பிரச்சினை தீர எல்லா கதவையும் தட்டுகிறோம் என்று தெரிவித்தார்.
இராக் அரசுக்கு எதிராக அல் காய்தா ஆதரவு பெற்ற ஐஎஸ்ஐஎஸ் அமைப்பைச் சேர்ந்த சன்னி தீவிரவாதிகள் பயங்கர போரில் ஈடுபட்டுள்ளனர். மோசுல், திக்ரித் ஆகிய இரு நகரங்களை கைப்பற்றிய அவர்கள் பாக்தாத் நோக்கி முன்னேறி வருகிறார்கள்.