ஒரே சம்பவத்தால் ஒட்டுமொத்த மலையாளிகளும் உச்சரிக்கும் பெயர் ஆகிவிட்டார் மோன்சன் மாவுங்கல். நூதனமுறையில் இவர் நடத்திய மோசடிகளும், சினிமா ப்ரியரான இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் இப்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
கேரள மாநிலம் ஆழப்புழாவைச் சேர்ந்தவர் மோன்சன் மாவுங்கல். தன்னம்பிக்கை பேச்சாளர், ஆயுர்வேத மருத்துவர், தொல்லியல் பொருட்கள் சேகரிப்பாளர், தெலுங்கு நடிகர் என பலதளங்களிலும் தன்னை அடையாளப்படுத்திக் கொள்பவர். சேர்த்தலா, எர்ணாகுளத்தில் இவருக்கு பிரம்மாண்ட இல்லமும் இருக்கிறது. இந்த இல்லத்தில் பழம்பொருட்களைக் கொண்ட அருங்காட்சியகமும் வைத்துள்ளார். இதனை மையமாக வைத்தே மிகப்பெரிய மோசடிகளை அரங்கேற்றி வந்திருக்கிறார் மாவுங்கல்.
புருனே சுல்தானின் கிரீடத்தை தான் விற்றதாகவும், அதில் வெளிநாட்டில் இருந்து 70 ஆயிரம் கோடி பணம் வர உள்ளதாகவும் மோசடியில் ஈடுபட்டார். அந்தப் பணத்திற்கு அரசுக்கு வரி செலுத்த வேண்டும். அப்படி செலுத்தினால்தான் தன் கணக்கிற்கு பணம்வரும் என ஷாஜி என்பவர் உள்பட பலரிடமும் ரூ.10 கோடி மோசடி செய்திருக்கிறார். பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரின் பேரில் இப்போது சிறையில் இருக்கிறார் மோன்சன் மாவுங்கல். ஆனால் இந்த நூதன மோசடியை அவர் அரங்கேற்றிய விதமே அவரைக் கேரளாவின் பேசுபொருள் ஆக்கியுள்ளது.
இதுகுறித்து இவ்வழக்கை விசாரித்து வரும் காவல் துறை அதிகாரிகள் இந்து தமிழ் திசையிடம் கூறும்போது, ‘‘மோன்சன் மாவுங்கல் திப்பு சுல்தானின் கிரீடம் முதல், இயேசு போட்டிருந்த ஆடை வரை தன்னிடம் இருப்பதாகக் கூறி பலரை நம்ப வைத்திருக்கிறார். அடிப்படையில் அவருக்கு பேச்சுத்திறமையும் இருந்ததால் மக்கள் நம்பும்படி சொல்லியிருக்கிறார். இயேசுவை காட்டிக் கொடுத்ததற்காக யூதாஸ் பெற்ற நாணயங்களில் இரண்டு, உலகில் முதலில் அச்சடிக்கப்பட்ட பைபிள், சதாம் உசேன் பயன்படுத்திய திருக்குரான், முகமது நபி பயன்படுத்திய கின்னம், திருவிதாங்கூர் மன்னரின் சிம்மாசனம் என அவர் கதைகட்டி காட்டிய பொருட்களை சமூகவலைதளங்களில் பார்த்து பிரம்மித்துவிட்டு விஐபிக்களே அவரது இல்லத்துக்கு பயணப்பட்டனர்.
கேரள காவல் துறையின் முன்னாள் இயக்குநர் லோக்நாத் பெகாராவும் மாவுங்கலை நம்பி அவர் அருங்காட்சியகத்துக்கு சென்றுள்ளார். அங்கு லோக்நாத் பெகாரா ஒரு சிம்மாசனத்தில் அமர்ந்துகொள்ள, பக்கத்தில் உதவி இயக்குநர் மனோஜ் ஆப்ரகாம் வாளைப்பிடித்துக்கொண்டு கம்பீரமாக புகைப்படம் எடுத்துள்ளனர். அதிகாரிகள் மட்டுமல்லாது, கேரள காங்கிரஸ் தலைவர் சுதாகரன் தொடங்கி, நடிகர் மோகன்லால் வரை இந்த அருங்காட்சியகத்துக்கு வந்து பார்வையிட்டுள்ளனர். அதையெல்லாம் புகைப்படமாக எடுத்து தனது அருங்காட்சியகத்திலேயே வைத்த மாவுங்கல், தன்னை நம்பவைக்க அதைப் பயன்படுத்திக்கொண்டார்.
ரஜினியின் பாட்ஷா திரைப்படம் மாவுங்கலுக்கு ரொம்பப் பிடிக்கும். அதேபோல் தன்னையும் ஒரு நிழல் உலக தாதாவாக கருதிக்கொண்டு நாயுடன் புகைப்படம், மொட்டை மாடியில் இருந்து பின்னால் பத்துபேருடன் நடந்து வருவது போல் புகைப்படம் என பதிவிட்டு அந்தத்தளத்திலும் தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டார். தெலுங்கில் சில படங்களிலும் நடித்துள்ளார். உலக அமைதி கவுன்சில் உறுப்பினர், கேரளர்களின் சர்வதேச சங்கம் எனப் பல அமைப்புகளிலும் முக்கிய பொறுப்பில் இருந்திருக்கிறார். பிரமுகர்களோடு தொடர்பு இருந்ததால் அவர் மீது எந்த வழக்கும் பதியாமல் பார்த்துக்கொண்டார்" என்றனர்.
அரசியல் புள்ளிக்கு தொடர்பா?
இதனிடையே மோன்சன் மாவுங்கல் விவகாரத்தில் அரசியல்வாதிகளின் பிண்ணனியும் இருப்பதாகக் கூறப்படுகிறது. கடந்த 2017-ம் ஆண்டில் இருந்து, 2020 நவம்பர் வரையிலான காலத்தில் தான் கிரீடம் விற்ற பணம் வருவதாகச் சொல்லி பத்து கோடி ஏமாற்றியிருக்கிறர் மாவுங்கல். இதில் கடந்த 2018 நவம்பரில் வெளிநாட்டுப் பணம் வங்கிக் கணக்கில் வருவதில் டெல்லியில் நிலவும் பிரச்சினைகளை தீர்ப்பதாகக் கூறி இப்போதைய கேரள காங்கிரஸ் தலைவர் சுதாகரன் வாக்கு கொடுத்ததால்தான் ரூ.25 லட்சம் பணம் கொடுத்ததாக பாதிக்கப்பட்ட ஒருவர் கூறியுள்ளார். தனக்கு மாவுங்கலை தெரியும் என சொல்லியிருக்கும் சுதாகரன், நிதிப் பரிவர்த்தனை தொடர்பான குற்றச்சாட்டை மறுத்துள்ளார். இதேபோல் பல்வேறு அரசியல் தலைவர்கள், காவல் துறை உயர் அதிகாரிகள் என பலரும் கேரளாவில் மோன்சன் மாவுங்கலுக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என அறிக்கை வெளியிட்ட வண்ணம் உள்ளனர்.
ஹாலிவுட் படக் கதையைப் போல....
கடந்த 2002-ல், பிரபல இயக்குநர் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் இயக்கத்தில் உருவான கிரைம் த்ரில்லர் படம் கேட்ச் மீ இஃப் யூ கேன்... லியோனார்டோ டீகேப்ரியோ கதாநாயகனாக நடித்திருப்பார். உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக் கொண்டு எடுக்கப்பட்டது இந்த ஹாலிவுட் படம்.
பிராங்க் அபக்நேல் என்ற இளைஞன். பான் அமெரிக்கன் வேர்ல்டு ஏர்வேஸ் நிறுவனத்தின் பைலட், ஜார்ஜியா நாட்டைச் சேர்ந்த டாக்டர், லூசியானா மாகாண வழக்கறிஞர் என பல வகையில் ஆள் மாறாட்டம் செய்து தனது 19 வயதுக்குள் பல கோடி டாலர்களை ஏமாற்றி சம்பாதித்தவன். இந்த வேடத்தில் தான் டீகேப்ரியோ நடித்திருப்பார்.
பான் அமெரிக்கன் பைலட் வேடத்தில், சம்பள செக்கை போலியாகத் தயாரித்து அதை டாலராக மாற்றி பல லட்சம் சம்பாதிப்பான் கதாநாயகன். அவனை எப்பிஐ ஏஜென்ட் ஒருவர் வளைத்துப் பிடிக்கப் போகும்போது, தானும் ஒரு ரகசிய ஏஜென்ட்தான் என்றும் பிராங்கை பிடிக்கத்தான் தானும் வந்திருப்பதாக கூறி ஏமாற்றி தப்பி விடுவான் ஹீரோ. அடுத்து டாக்டராக நடித்து ஒரு திருமணமும் செய்து கொள்கிறான்.
மீண்டும் பைலட்டாக நடித்து ஏமாற்று வேலையைத் தொடரும் ஹீரோ, போலீஸ் தன்னை வலை வீசித் தேடுவதை அறித்து, போலியாக ஏர் ஹோஸ்டஸ் தேர்வு நடத்தி, 8 பெண்களை வேலைக்கு எடுத்து அவர்களுடன் மியாமி விமான நிலையம் வந்து, போலீஸாரின் கண் முன்பே, ஸ்பெயினுக்குத் தப்பி விடுவான்.
இறுதியில் பிடிபடும் ஹீரோவுக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைக்கிறது. சிறையில் இருக்கும் ஹீரோவை சந்திக்க வரும் போலீஸ் அதிகாரி, ஒரு செக்கை கொடுக்கிறார். அதைத் தடவிப் பார்த்தவுடனேயே அதை போலி செக் எனக் கூறும் ஹீரோ, அந்த மோசடியில் வங்கி காசாளருக்கும் தொடர்பு இருக்கும் என அடித்துக் கூறுகிறான். விசாரணையில் ஹீரோ சொன்னது சரிதான் எனத் தெரிய வருகிறது. ஹீரோவின் திறமையை அறிந்த அந்த போலீஸ் அதிகாரி, தண்டனைக் காலத்தின் மீதியை எப்பிஐயின் செக் மோசடி பிரிவில் வேலை பார்த்து கழிக்கட்டும் என அனுமதி வாங்கி, ஹீரோவை வேலைக்குச் சேர்க்கிறார். இப்படி போகிறது அந்தக் கதை. அதைப் போலவே இந்த கேரளத்து மோசடி ஆசாமியும் பலரையும் ஏமாற்றி வந்திருக்கிறார்.