இந்தியா

விஜய் மல்லையா விவகாரம்: மாநிலங்களவையில் காங். அமளி

பிடிஐ

பிரிட்டனுக்கு தப்பியோடிய தொழிலதிபர் விஜய் மல்லையா, ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி ஆகியோரை இந்தியாவுக்கு கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தி மாநிலங்களவையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் நேற்று அமளியில் ஈடுபட்டனர்.

மாநிலங்களவையில் நேற்று கேள்வி நேரத்துக்கு பிறகு இந்த விவகாரத்தை காங்கிரஸ் உறுப்பினர் பிரமோத் திவாரி எழுப்பினார். அப்போது காங்கிரஸ் உறுப்பினர்கள் அனைவரும் அவையின் மையப்பகுதிக்கு சென்று கோஷமிட்டனர்.

பிரமோத் திவாரி பேசியபோது, “பாஜக ஆதரவுடன்தான் விஜய் மல்லையா மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டார்” என்றார். இந்த விவகாரத்தை அவையின் ஒழுங்கு நடவடிக்கை குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதற்கு அவை துணைத் தலைவர் பி.ஜே.குரியன் பதில் அளிக்கும்போது, “இந்த விவகாரத்தை அவையில் எழுப்ப அவைத் தலைவர் ஹமீத் அன்சாரி ஒப்புதல் அளிக்கவில்லை” என்றார்.

என்றாலும் அவை மையப்பகுதியில் கூடியிருந்த காங்கிரஸ் உறுப்பினர்கள், “விஜய் மல்லையா, லலித் மோடியை திரும்பக் கொண்டு வர வேண்டும்” என தொடர்ந்து கோஷமிட்டனர். இதனால் அவையில் கடும் அமளி ஏற்பட்டது.

அவையை தொடர்ந்து நடத்த முடியாததால் சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது.

சுமார் 17 வங்கிகளில் ரூ.9,000 கோடி கடன் வாங்கியுள்ள விஜய் மல்லையா அந்த கடனை திருப்பிச் செலுத்தவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதனிடையே காசோலை மோசடி வழக்கில் அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவரமுடியாத பிடிவாரன்ட்டை ஹைதராபாத் நீதிமன்றம் நேற்று முன்தினம் பிறப்பித்தது. வரும் ஏப்ரல் 13-ம் தேதி அவரை ஆஜர்படுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஐபிஎல் போட்டியில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்ட லலித் மோடி நீண்ட காலமாக பிரிட்டனில் வசிக்கிறார். அந்த நாட்டின் குழப்பமான சட்டங்களால் லலித் மோடி, விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு வருவதில் சிக்கல் நீடிக்கிறது.

SCROLL FOR NEXT