இது அவமானம் இல்லை என்றால் வேறு என்ன என மூத்த காங்கிரஸ் தலைவர் ஹரீஷ் ராவத்துக்கு அம்ரீந்தர் சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.
பஞ்சாப் முதல்வராக இருந்த கேப்டன் அமரீந்தர் சிங் காங்கிரஸ் மேலிடத்தின் உத்தரவையடுத்து அண்மையில் ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து பஞ்சாபின் புதிய முதல்வராக சரண்ஜித் சிங் பதவியேற்றுக் கொண்டார். இந்நிலையில், பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை சித்து திடீரென ராஜினாமா செய்தார்.
இந்த குழப்பமான சூழலில் பாஜக மூத்த தலைவருமான அமித் ஷாவை அவரது வீட்டில் அமரீந்தர் சிங் சந்தித்துப் பேசினார்.
பின்னர் தனியார் தொலைகாட்சி பேட்டியளித்த அமரீந்தர் சிங் கூறுகையில் ‘‘நான் காங்கிரஸில் தொடர்ந்து இருக்க மாட்டேன். அதேசமயம் பாஜகவில் சேர மாட்டேன்’’ எனக் கூறினார்.
இந்தநிலையில் மூத்த காங்கிரஸ் தலைவர் ஹரீஷ் ராவத் அமரீந்தர் சிங்கை கடுமையாக சாடியுள்ளார். அவர் இதுகுறித்து கூறுகையில் ‘‘கேப்டன் அமரீந்தர் சிங் மற்றும் பிரகாஷ் சிங் பாதல் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்கிறார்கள். அவர்களுக்குள் ஒரு ரகசிய புரிதல் இருக்கிறது.
இது நாங்கள் மட்டுமல்ல, மாநிலம் முழுவதும் இதுபற்றி ஒரு பொதுவான கருத்து இருந்தது. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற நான் அவருக்கு ஆலோசனை வழங்கினேன். குறைந்தது ஐந்து முறையாவது நான் கேப்டன் அமரீந்தர் சிங்கை சந்தித்து பேசினேன். இந்த பிரச்சினைகளைப் பற்றி விவாதித்தேன். ஆனால் எந்த பலனும் இல்லை.
அரசையும் கட்சியையும் தனது பண்ணை வீட்டிலிருந்து அமரீந்தர் சிங் கட்டுப்படுத்த முயன்றார். ஆனால் அவர் தலைமைச் செயலகத்தில் இல்லாதது பேசுவதில்லை. இதுகுறித்து யாரும் கேள்வி கேட்கக் கூடாது என்று அவர் எண்ணுகிறார்.
கேப்டன் அமரீந்தர் சிங் காங்கிரஸால் அவமதிக்கப்பட்டதாக கூறியுள்ளார். ஆனால் அதில் எந்த உண்மையும் இல்லை. கேப்டனின் சமீபத்திய கருத்துகள் அவர் ஒருவித அழுத்தத்தில் இருப்பதை உணர்த்துகிறது. அவர் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும், பாஜகவுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ உதவக்கூடாது. இது எனது வேண்டுகோள்’’ எனக் கூறியிருந்தார்.
இந்தநிலையில் ஹரீஷ் ராவத்துக்கு அமரீந்தர் சிங் பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது:
கட்சி என்னை அவமானப்படுத்த விரும்பவில்லை என்றால், நவஜோத் சிங் சித்து ஏன் என்னை வெளிப்படையாக விமர்சிக்க அனுமதித்தார்கள். சமூக ஊடகங்கள் மற்றும் பிற பொது தளங்களில் பல மாதங்களாக அவர் என்னை தாக்க எப்படி அனுமதிக்கப்பட்டார். எனது அதிகாரத்தை குறைப்பதற்காக சித்து தலைமையிலான எதிர்ப்பாளர்களுக்கு கட்சி ஏன் உதவியது.
அவமானம் என் மீது சுமத்தப்பட்டதை உலகம் கண்டது. ஆனால் ஹரிஷ் ராவத் இதற்கு நேர்மாறாக எனக்கு அவமானம் ஏற்படவில்லை என்கிறார். இது அவமானம் இல்லை என்றால் வேறு என்ன.
இவ்வாறு அம்ரீந்தர் சிங் கூறியுள்ளார்.