டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் | கோப்புப்படம் 
இந்தியா

வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம்: டெல்லி அரசுக்கு உயர் நீதிமன்றம் அனுமதி

ஏஎன்ஐ

டெல்லியில் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று ரேஷன் பொருட்களை வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்த டெல்லி அரசுக்கு உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

நியாயவிலைக் கடைகளில் எந்தவிதமான தட்டுப்பாடும் இல்லை என்ற பட்சத்தில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தலாம் என்று டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்களை வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்த ஆம் ஆத்மி அரசு அறிவித்து, முக்கிய மந்திரி கர் கர் ரேஷன் யோஜனா என்ற திட்டத்தைச் செயல்படுத்த ஒப்பந்தப் புள்ளிகளையும் கோரியிருந்தது. ஆனால், இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தினால் ரேஷன் பொருட்களுக்குத் தட்டுப்பாடு வரும் என்று டெல்லி சர்காரி ரேஷன் டீலர்கள் சங்கத்தினர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

தங்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் ஒதுக்கீட்டில் இருந்து ரேஷன் பொருட்கள் குறைக்கப்படலாம். ஆதலால், இந்த திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று மனுவில் தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து, இந்த திட்டத்தைச் செயல்படுத்த கடந்த மார்ச் 22-ம் தேதி பிறப்பித்த உத்தரவில் டெல்லி சர்காரி ரேஷன் டீலர்கள் சங்கத்தினருக்கு வழங்கப்படும் ரேஷன் பொருட்கள் ஒதுக்கீட்டில் எந்த அளவும் குறையக்கூடாது, நிறுத்தக்கூடாது எனத் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் டெல்லி அரசு சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், “ பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் மக்களிடம் கேட்கப்பட்ட கருத்து, பதிவு செய்யப்பட்ட கருத்தில் அவர்கள் வீடுகளுக்கே வந்து ரேஷன் பொருட்களை வழங்கும் திட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள்.

அதே சமயம், விருப்பம் இருந்தால், நேரடியாக நியாயவிலைக் கடைக்கும் சென்று பொருட்களை வாங்கிக் கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது. இதில் பயனாளிகள் எந்த வாய்ப்பையும் தேர்ந்தெடுக்கலாம்” எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த மனு உயர் நீதிமன்ற நீதிபதிகள் விபின் சாங்கி, ஜஸ்மீத் சிங் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவில், “கடந்த மார்ச் 22-ம் தேதி நாங்கள் பிறப்பித்த உத்தரவை மாற்றி அமைக்கிறோம்.

இதன்படி, டெல்லி அரசு முதலில் ஒவ்வொரு நியாய விலைக்கடை டீலர்களுக்கும் முறையாக கடிதம் எழுதி, எத்தனை ரேஷன் அட்டைதாரர்கள் வீடுகளுக்கே ரேஷன் பொருட்கள் பெறும் திட்டத்துக்கு சம்மதிக்கிறார்கள் என்ற பட்டியலைப் பெற்று அதன்பின் அவர்களுக்கு வீட்டுக்கே சென்று ரேஷன் பொருட்களை வழங்கலாம்.

ஆனால், ரேஷன் கடைகளுக்கு ஏற்கெனவே வழங்கப்படும் அளவில் பொருட்களை ஒதுக்கீடு செய்ய வேண்டிய தேவை இல்லை. இந்தத் திட்டத்தை மக்கள் மத்தியில் டெல்லி அரசு விளம்பரம் செய்ய வேண்டும். விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இந்த வழக்கின் அடுத்த விசாரணை வரும் 22-ம் தேதிக்கு ஒத்திவைக்கிறோம்” எனத் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT