தற்செயலான எந்த சூழலையும் சந்திக்க தயாராக இருப்பதே ராணுவத்தின் கலாச்சாரம் என்று ராணுவ தலைமை தளபதி எம்.எம்.நரவானே கூறியுள்ளார்.
டெல்லியில் பிஎச்டி தொழில் வர்த்தக சபையின் 116-வது ஆண்டுக் கூட்டத்தை முன்னிட்டு ‘உறுதியான இந்தியா’ என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் ராணுவ தளபதி எம்.எம்.நரவானே பேசியதாவது:
கரோனா வைரஸ் பெருந் தொற்றால் ஏற்பட்ட சவால் மிகவும் அபூர்வமானது, முன்மாதிரி இல்லாததது. நம்மை நாம் தற்காத்துக் கொள்ள வேண்டிய நிலையை ஏற்படுத்தி உள்ளது. தொற்றுக் காலத்தின் ஆரம்ப நாட்களில் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டன.
தொற்றுக் காலத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையைப் போக்க பல்வேறு இடங்களுக்கும் சென்று ஆக்ஸிஜன் விநியோகம் செய்ததில் ராணுவத்தின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. தற்செயலான எந்த சூழலையும் சந்திக்க ராணுவம் எப்போதும் தயாராக இருக்க வேண்டும். அவ்வாறு தயாராக இருப்பதே ராணுவ கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகும். கரோனா தொற்றுக்கு எதிராக இந்தியா உறுதியுடன் போராடியது.
நாட்டின் பாதுகாப்பு தொழில் துறையை ஊக்குவிக்க ராணுவம் உறுதி பூண்டுள்ளது. நாட்டின் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தளவாடங்கள் தயாரிப்பில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி துல்லியமான பாகங்களை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும். பல்வேறு சவால்களுக்கு இடை யிலும் இந்திய ராணுவம் பிராந்திய ஒருமைப்பாட்டையும் இந்திய இறையாண்மையையும் பாதுகாக்கும் முயற்சியில் எப்போதும் ஈடுபட்டுள்ளது.
இவ்வாறு ராணுவ தலைமை தளபதிநரவானே பேசினார்.