காங்கிரஸ் கட்சியை நாம் வீழ்த்த வேண்டாம், ராகுல் காந்தியே பார்த்துக் கொள்வார் என மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சவுகான் கூறியுள்ளார்.
பஞ்சாப் முதல்வராக இருந்த கேப்டன் அமரீந்தர் சிங் காங்கிரஸ் மேலிடத்தின் உத்தரவையடுத்து அண்மையில் ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து பஞ்சாபின் புதிய முதல்வராக சரண்ஜித் சிங் பதவியேற்றுக் கொண்டார்.
இந்நிலையில், பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை சித்து நேற்று முன்தினம் திடீரென ராஜினாமா செய்தார். அடுத்தடுத்த குழப்பங்களால் பஞ்சாப் மாநில காங்கிரஸில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனை மத்திய பிரதேச முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான சிவராஜ் சவுகான் கிண்டல் செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
காங்கிரஸ் கட்சியை ராகுல் காந்தி மூழ்கடித்து வருகிறார். பஞ்சாப் மாநிலத்தில் நிலையான ஆட்சி இருந்தது. முதல்வராக அமரீந்தர் சிங் இருந்தார். அவரை ராகுல்காந்தி பதவியில் இருந்து நீக்கி விட்டு சித்து வேண்டுகோளை ஏற்று புதிய முதல்வராக சரண்ஜித் சிங் சன்னியை நியமித்தார்.
இப்போது சித்துவும் மாநில தலைவர் பதவியில் இருந்து விலகிவிட்டார். பஞ்சாபில் நிலையான அரசு அகற்றப்பட்டு இருக்கிறது. அங்கு உறுதியற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியில் ராகுல் காந்தி எவ்வளவு நாள் இருக்கிறாரோ அதுவரை நாம் எதுவும் செய்ய வேண்டாம். காங்கிரஸை பாஜக வீழ்த்த வேண்டாம். ராகுல் காந்தியே பார்த்துக் கொள்வார்.
இவ்வாறு அவர் கூறினார்.