பஞ்சாப் காங்கிரஸ் கட்சியில் உச்சபட்ச குழப்பம் நிலவும் நிலையில் அம்மாநில முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியை, நவ்ஜோத் சிங் சித்து இன்று மாலை 3 மணியளவில் சந்தித்து பேசுகிறார்.
பஞ்சாபில் காங்கிரஸ் சார்பில் முதல்வராக இருந்த அமரீந்தர் சிங்குக்கும் எம்எல்ஏ நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் இடையே தொடர்ந்து மோதல் நிலவி வந்தது. இதில் அமரீந்தரின் விருப்பதை மீறி, மாநில காங்கிரஸ் தலைவராக சித்து கடந்த ஜூலை மாதம் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை சித்து நேற்று முன்தினம் ராஜினாமா செய்தார். இதையடுத்து அவருக்கு ஆதரவாக அமைச்சர் ஒருவரும் கட்சி நிர்வாகிகள் மூவரும் பதவி விலகினர். கட்சித் தலைவராக பொறுப்பேற்ற 2 மாதங்களில் சித்து பதவி விலகியது கட்சி மேலிடத்துக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து சித்துவை சமாதானம் செய்யும் முயற்சியில் காங்கிரஸ் தலைமை இறங்கியுள்ளது. பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தது முதலே சித்து தனது வீட்டிலேயே இருந்து வருகிறார். அமைச்சர்கள் பர்கத் சிங் மற்றும் அமரீந்தர் சிங் ராஜா வாரிங் உட்பட பல தலைவர்கள் நவ்ஜோத் சிங் சித்துவை அமைதிப்படுத்தும் முயற்சியாக பாட்டியாலாவில் உள்ள அவரது இல்லத்தில் அவரைச் சந்தித்துப் பேசினர்.
இதுதொடர்பாக முதல்வர் சரண்ஜித் சன்னி நேற்று கூறும்போது, “சித்துவிடம் தொலைபேசியில் பேசினேன். அவரது கவலைகள் குறித்து விவாதிக்க தயாராக இருக்கிறேன். பேச்சுவார்த்தையில் கட்சி நம்பிக்கை கொண்டுள்ளது. நாம் கலந்து பேசி பிரச்சினைக்கு தீர்வு காணலாம், வாருங்கள்’ என அழைத்தேன். எனது நியமனங்களில் யாருக்கேனும் ஆட்சேபம் இருக்குமானால் அதில் நான் பிடிவாதம் காட்ட மாட்டேன். எனக்கு ஈகோ பிரச்சினை ஏதுமில்லை” என்றார்.
இந்தநிலையில் நவ்ஜோத் சிங் சித்து இன்று முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியை மாலை 3 மணியளவில் சந்தித்து பேசுகிறார். இதுகுறித்து சித்து தனது ட்விட்டர் பக்கதத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறுகையில் "பேச்சுவார்த்தைக்கு முதல்வர் என்னை அழைத்தார். இன்று மாலை 3:00 மணிக்கு சண்டிகரில் உள்ள பஞ்சாப் பவனில் சந்தித்து பேசுகிறோம். எந்த விவாதத்திற்கும் அவரை வரவேற்கிறேன்" என சித்து தெரிவித்துள்ளார்.