பட்டாசுகளில் விஷத்தன்மை வாய்ந்த ரசாயனங்களை பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பண்டிகை காலங்களில் பட்டாசுகள் வெடிப்பதால் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படுவதாக கூறி உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2015-ம் ஆண்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பட்டாசுகளுக்கு தடைவிதித்து உத்தரவிட்டது.
இதேபோல, சுற்றுச்சூழல் மாசை அதிகரிக்கும் சரவெடி போன்ற தொடர் பட்டாசு வகைகளுக்கும் உச்ச நீதிமன்றம் கடந்த 2018-ம் ஆண்டு தடை விதித்திருந்தது.
இதனிடையே, பட்டாசு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் எதையும் பட்டாசு உற்பத்தியாளர்கள் கடைப்பிடிக்கவில்லை எனக் கூறி அர்ஜுன்கோபால் என்ற மாணவர் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது.
நேற்று முன்தினம் நடந்த விசாரணையில், பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் ஆஜராகினர். அப்போது அவர்கள், இந்ததொழிலை நம்பி ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இருப்பதாக தெரிவித்தனர். இதற்கு பதிலளித்த நீதிபதிகள், "சிலரது வேலைவாய்ப்பானது பலரின் வாழ்வுரிமையை மீறுவதாக இருக்கக் கூடாது" எனத் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கானது நீதிபதிகள் எம்.ஆர். ஷா, ஏ.எஸ். போபன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
பட்டாசுகளில் விஷத்தன்மை வாய்ந்த பேரியம் போன்ற ரசாயனங்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படுவதாக சிபிஐ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேரியம் போன்ற தடை செய்யப்பட்ட ரசாயனங்களை பயன்படுத்துவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. மேலும், இது நீதிமன்ற உத்தரவை மீறும் செயலாகும்.
சிபிஐ அறிக்கை நகல்..
உயிரினங்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஆபத்தை விளைவிக்கும் பேரியம் போன்ற ரசாயனங்கள் பட்டாசுகளில் பயன்படுத்தப்படுவது மிக தீவிரமான பிரச்சினையாகும். இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ நடத்திய முதல்கட்ட விசாரணை அறிக்கையின் நகல், இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட அனைத்து வழக்கறிஞர்களுக்கும் வியாழக்கிழமை (இன்று)வழங்க வேண்டும். இந்த வழக்கு தொடர்பான அடுத்தக்கட்ட விசாரணை அக்டோபர் 6-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.-பிடிஐ