இங்கிலாந்தைச் சேர்ந்த வாத்வான்குளோபல் கேபிடல் லிமிடெட் நிறுவனத்தின் ரூ.578 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை நேற்று முடக்கியுள்ளது.
உத்தரப் பிரதேச பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் (யுபிபிசிஎல்) நிறுவனத்தின் ஊழியர்கள் சேம நல நிதி (பிராவிடன்ட் பண்ட்) ஊழல் புகார் தொடர்பாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த புகாரில் திவான் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனமும் (டிஹெச்எப்எல்) ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இந்த நிறுவனம் கபில் மற்றும் தீரஜ் வாத்வான் ஆகியோருக்கு சொந்தமானது. இவர்கள் மீது பல்வேறு மோசடி வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதோடு விசாரணையும் நடைபெற்று வருகிறது.
விசாரணையில் டிஹெச்எப்எல் நிறுவனம் யுபிபிசிஎல் அதிகாரிகள் கூட்டுடன் ரூ.4,122.70 கோடி தொகையை பெற்றுள்ளது. இந்தத் தொகையானது யுபிபிசிஎல் ஊழியர்கள் சேம நல நிதி மற்றும் நிரந்தர கணக்கு சேமிப்பு தொகையாகும்.
டிஹெச்எப்எல் நிறுவனத்தில் மொத்தம் முதலீடு செய்யப்பட் ரூ.4,122.70 கோடி தொகையில் ரூ.2,267.90 கோடி தொகையானது யுபிபிசிஎல் பணியாளர்களின் சேம நல நிதி தொகையாகும். இந்தத் தொகையை இதுவரையில் டிஹெச்எப்எல் செலுத்தவில்லை.
இந்த முதலீட்டுத் தொகையானது டிஹெச்எப்எல் நிறுவனம் முறைகேடாக அதிக முதலீட்டுத் திட்டங்களுக்கு கடன் வழங்கிய காலத்தில் பெறப்பட்டுள்ளது என்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
இவ்விதம் பெறப்பட்ட தொகையில் குறிப்பிட்ட தொகை வெவ்வேறு பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. அதில் குறிப்பாக ரூ.1,000 கோடி தொகையானது வாத்வான் மூலமாக இங்கிலாந்து நிறுவனத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. 30 வகையான பயனாளிகள் மூலமாகவும். இந்திய நிறுவனங்கள் மூலமாகவும் இந்தத் தொகை பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது.
அமலாக்கத்துறை யெஸ் வங்கி - டிஹெச்எப்எல் மோசடி வழக்கு தொடர்பாக ரூ.1,412 கோடியை பறிமுதல் செய்துள்ளது. இது தொடர்பாக கபில் மற்றும் தீரஜ் வாத்வான் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தவிர இந்நிறுவனம் வசம் உள்ள சொகுசு வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ.12.59கோடியாகும். லக்னோ காவல்துறை பதிவு செய்த முதல் தகவல்அறிக்கை (எப்ஐஆர்) அடிப்படையில் அமலாக்கத்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
யுபிபிசிஎல் அதிகாரிகள் ரூ.4,122.70 கோடியை டிஹெச்எப்எல் நிறுவனத்தில் முதலீடு செய்தது தொடர்பாக லக்னோ காவல்துறை வழக்கு பதிவு செய்திருந்தது.
டிஹெச்எப்எல் நிறுவனத்தை கையகப்படுத்தியது பிரமள்
திவாலான திவான் ஹவுசிங் பைனான்ஸ் கார்ப்பரேஷன் (டிஹெச்எப்எல்) நிறுவனத்தை ரூ.14,700 கோடிக்கு கையகப்படுத்துவதாக பிரமள் என்டர்பிரைசஸ் நிறுவனம் நேற்று அறிவித்தது. டிஹெச்எப்எல் நிறுவனத்தின் மொத்த சொத்தான ரூ.34,250 கோடி தொகைக்கு பொறுப்பேற்பதாக பிரமள் நிறுவனம் தெரிவித்துள்ளது. நிறுவனம் வெளியிட்டுள்ள 10 ஆண்டு கடன் பத்திரம் ரூ.19,550 கோடிக்கும் இந்நிறுவனம் பொறுப்பேற்றுள்ளதோடு அதற்கு ஆண்டுக்கு 6.75 சதவீத வட்டி அளிக்கும் பொறுப்பையும் ஏற்றுள்ளது. அரையாண்டு அடிப்படையில் வட்டி விகிதம் வழங்கவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் தலைவர் அஜய் பிரமள் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். திவால் மசோதா நடவடிக்கை (ஐபிசி) மூலம் இந்நிறுவனம் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
பண மதிப்பீடு அடிப்படையில் மிகப் பெரிய பரிவர்த்தனை இதுவாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
டிஹெச்எப்எல் நிறுவனத்தைக் கையகப்படுத்தும் முடிவுக்கு 94% கடன் அளித்தவர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். இது முழுமை பெற ரிசர்வ் வங்கி ஒப்புதல் பெற வேண்டும்.