இந்தியா

60 வயது முதியோர் வேலை தேட புதிய இணையதளம் தொடக்கம்: மத்திய சமூக நீதித் துறை அறிமுகம்

செய்திப்பிரிவு

அறுபது வயதுக்கு மேற்பட்ட முதியோர் மீண்டும் வேலைவாய்ப்பை தேட, புதிய இணையதளத்தை மத்திய சமூக நீதித் துறை அமைச்சகம் நாளை அறிமுகம் செய்கிறது.

இந்தியாவில் முதியோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 1951-ம் ஆண்டு 2 கோடியாக இருந்த முதியோரின் எண்ணிக்கை, கடந்த 2001-ம்ஆண்டு 7.6 கோடியாக உயர்ந்தது. கடந்த 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படிஇந்த எண்ணிக்கை 10.4 கோடியாக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், 60 வயதைக் கடந்த முதியோர் பலர் பல்வேறு காரணங்களால் மீண்டும் வேலை செய்ய விருப்பப்படுகின்றனர். அதை கருத்தில் கொண்டு மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை அமைச்சகம் முதல் முறையாக புதிய இணையதளத்தை அறிமுகம் செய்கிறது.

நாட்டில் 60 வயது அல்லதுஅதற்கு மேற்பட்ட முதியோருக்கு மீண்டும் கவுரவமான வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தருவதே இதன் நோக்கம். இதற்காக ‘சீனியர் ஏபுள் சிட்டிசன் பார் ரீ-எம்ப்ளாய்மென்ட் இன் டிக்னிட்டி (சேக்ரட்) போர்ட்டல்’ என்ற பெயரில்மத்திய அமைச்சகம் இணையதளத்தை அறிமுகம் செய்கிறது. இது நாளை முதல் செயல்பாட்டுக்கு வருகிறது. மீண்டும் வேலை செய்ய விரும்பும் முதியோர் இதில் பதிவு செய்து கொள்ளலாம்.

இதுகுறித்து மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை அமைச்சக செயலர் ஆர்.சுப்ரமணியம் நேற்று கூறியதாவது:

இந்த ‘போர்ட்டல்’ வேலைவாய்ப்பு அளிக்க முன்வரும் நிறுவனங்களுக்கும் முதியோருக்கும் ஒரு பாலமாக இடையில் ஒரு பாலமாக இருக்கும். இரு தரப்பினரும் ஆன்லைனிலேயே தகவல் பரிமாற்றம் செய்து கொள்ளலாம். முதியோருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்துவதற்காக சிஐஐ, எப்ஐசிசிஐ மற்றும் அசோசெம் உட்பட பல்வேறு நிறுவனங்களுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.

இந்த போர்ட்டல் செயல்பாட்டுக்கு வந்ததும், 60 வயது முதியோர் தங்களுடைய பெயர், கல்வித்தகுதி, அனுபவம், திறமை, எந்தத்துறையில் ஆர்வம் போன்ற தகவல்களை பதிவு செய்ய வேண்டும். இதன் மூலம் எத்தனை ஊழியர்கள் தேவை, எந்தெந்தத் துறையில் ஊழியர்கள் தேவை என்பதை நிறுவனங்கள் முடிவு செய்து வேலைவாய்ப்பை வழங்கும். முதியோர் வேலைவாய்ப்பை பெறுவதற்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உதவி செய்யவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை அமைச்சகம் எந்த வேலை உத்தரவாதமும் அளிக்கவில்லை.

இவ்வாறு செயலர் ஆர்.சுப்ரமணியம் கூறினார்.-பிடிஐ

SCROLL FOR NEXT