அலி பாபர் பத்ரா 
இந்தியா

பாகிஸ்தானுக்கு மீண்டும் அழைத்துச் செல்ல இந்திய ராணுவத்தினரிடம் பிடிபட்ட ‘டீன் ஏஜ்’ தீவிரவாதி வேண்டுகோள்

செய்திப்பிரிவு

காஷ்மீரின் உரி எல்லைப் பகுதியில் கடந்த 26-ம் தேதியன்று அங்கிருந்த ஒரு பதுங்குக் குழிக்குள் மறைந்திருந்த இரண்டு தீவிரவாதிகள், ராணுவத்தினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். ராணுவ வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தினர்.

இந்த சம்பவத்தில் ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டார். மற்றொரு தீவிரவாதி தன்னை உயிருடன் விடுமாறு வேண்டுகோள் விடுத்து ராணுவத்தினரிடம் சரணடைந்தார்.

விசாரணையில், அவரது பெயர் அலி பாபர் பத்ரா (19) என்பது தெரியவந்தது. தமது வறுமை நிலையை பயன்படுத்தி லஷ்கர் - இ – தொய்பா தீவிரவாதிகள் தம்மை அவர்களின் இயக்கத்தில் சேர்த்ததாகவும், காஷ்மீரில் தாக்குதல் நடத்துவதற்காக பாகிஸ்தான் ராணுவமும், ஐஎஸ்ஐ உளவு அமைப்பும் தனக்கு ஆயுதப் பயிற்சி வழங்கி இங்கு அனுப்பி வைத்ததாகவும் வாக்குமூலம் அளித்தார்.

இதனிடையே, அவர் பேச்சு அடங்கிய வீடியோவை இந்திய ராணுவம் நேற்று வெளியிட்டது. அதில் அவர் கூறியிருப்பதாவது:

காஷ்மீர் குறித்து பாகிஸ்தான் இளைஞர்களுக்கு தவறான தகவல்கள் தரப்படுகின்றன. இங்கு எல்லா இடங்களிலும் அமைதி நிலவுகிறது. இந்திய ராணுவ வீரர்கள் என்னை நன்றாக பார்த்துக் கொள்கிறார்கள். மூன்று நேர உணவுடன், ஐந்து வேளை தொழுகை செய்யவும் என்னை அனுமதிக்கிறார்கள். நான் என் தாயாரை பார்க்க வேண்டும்.

இந்தியாவில் நிலவும் சூழல் குறித்தும், இந்திய ராணுவ வீரர்களின் கனிவு குறித்து அவரிடம் கூற வேண்டும். என்னை காஷ்மீருக்கு அனுப்பி வைத்த பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள், என்னை மீண்டும் தாய்நாட்டுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். இவ்வாறு அந்த வீடியோவில் அலி பாபர் பத்ரா கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT