தேசியவாதம் குறித்த விவாதத்தில் பாஜகவுக்கு கொள்கை அளவில் வெற்றி கிடைத்துள்ளது என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறினார்.
டெல்லியில் நடந்த மாநில பாஜக செயற்குழு கூட்டத்தில் இது தொடர்பாக ஜேட்லி பேசியதாவது:
நாட்டின் கோடிக்கணக்கான மக்களை ஊக்குவித்த சவார்கரின் தேசியவாதம் குறித்து சிலர் (காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர்) கேள்வி எழுப்புகின்றனர். பிரிவினைவாதம் பற்றி பேசுவோரின் நிகழ்ச்சிகளில் இவர்கள் பங்கேற்கின்றனர். இது நமக்கு மிகப்பெரிய கருத்தியல் சவாலாக உள்ளது. இதை நாங்கள் கருத்தியல் மோதலாகவே கருதுகிறோம்.
மேலும் இதன் முதல் சுற்றில் நாங்கள் வெற்றி பெற்றதாகவே கருதுகிறோம். இதுவரை தேசவிரோத முழக்கம் எழுப்பியவர்கள் ‘பாரத மாதாவுக்கு ஜே’ என்று சொல்லாவிட்டாலும் ‘ஜெய் ஹிந்த்’ என்று சொல்கின்றனர். இதை அவர்கள் சொல்லவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக்கியதன் மூலம் கருத்தியல் விவாதத்தின் முதல் சுற்றில் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம்.
பாஜகவின் சிந்தாந்தத்துக்கு தேசியவாதமே அடிப்படையாகும். பிரிவினைவாதம் பற்றி பேசுவதை பேச்சு சுதந்திரம் என்று அழைப்பது வினோதமானது. இதை சட்டமோ, அரசியல் சாசனமோ அனுமதிக்கவில்லை. ஆனால் இதெல்லாம் தலைநகர் டெல்லியில் நடந்துகொண்டிருக்கிறது.
அடுத்த சில நாட்களில் ‘எழுக இந்தியா’ திட்டத்தை மத்திய அரசு தொடங்க உள்ளது. எஸ்சி, எஸ்டி வகுப்பினர் மற்றும் பெண்கள் பெரிய அளவில் தொழில் தொடங்குவதற்கு ஒவ்வொரு வங்கிக் கிளையும் இத்திட்டத்தின் கீழ் ரூ.1 கோடி கடன் வழங்க உள்ளது. இத்திட்டம் குறித்து எஸ்சி, எஸ்டி வகுப்பினர் மற்றும் பெண்களிடம் பாஜகவினர் விளக்க வேண்டும்.
காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்குமாறு மக்களுக்கு மோடி ஏற்கெனவே அழைப்பு விடுத்திருத்தார். அருணாச்சலப்பிரதேசத்தில் ஆட்சியில் இருந்து காங்கிரஸ் வெளியேறி விட்டது. உத்தராகண்ட்டில் எந்த நாளிலும் வெளியேறலாம். கேரளா மற்றும் அசாமில் இதற்கான அறிகுறிகள் காணப்படுகிறது. மோடியின் முழக்கத்தை இந்திய வாக்காளர்கள் மெய்ப்பித்து வருகின்றனர்.
கிரிக்கெட் விளையாட்டில் 10-வது அல்லது 11-வது மட்டை வீச்சாளர் போல ஏதேனும் ஒரு கூட்டணியில் ஒட்டிக்கொள்வதே காங்கிரஸின் தற்போதைய நோக்கமாக உள்ளது. பிஹாரில் லாலு, நிதிஷ்குமாருடன் கூட்டணி வைத்துக்கொண்டது. தமிழகத்தில் திமுகவிடம் தொகுதிகள் கேட்டு கெஞ்சி வருகிறது. ஒவ்வொரு கூட்டணியிலும் அதன் இறுதியில் ஒட்டிக்கொள்ளும் நிலைக்கு காங்கிரஸ் கட்சியை அதன் தலைவர்கள் கொண்டு சென்று விட்டனர்.
இவ்வாறு ஜேட்லி பேசினார்.