இந்தியா

தடையற்ற நெடுஞ்சாலை போக்குவரத்துக்கான சேது பாரத திட்டம்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

செய்திப்பிரிவு

நாடு முழுவதும் உள்ள லெவல் கிராஸிங்குகளை நீக்கி, தடையற்ற நெடுஞ்சாலை போக்குவரத்தை உறுதி செய்யும் ரூ.50,800 கோடி மதிப்பிலான சேது பாரத திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமையன்று தொடங்கி வைத்தார்.

வரும் 2019-ம் ஆண்டுக்குள் ரயில்வே பாதைகள் குறுக்கிடாத நெடுஞ்சாலைகள் அமைக்கவும், ஆங்கிலேயர்கள் காலத்தில் எழுப்பப்பட்ட 1,500 மேம்பாலங்களை புதுப்பிக்கவும் சேது பாரத திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் முறைப்படி தொடங்கி வைத்தார்.

திட்டத்தை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது:

மனித உடம்புக்கு நாடி நரம்புகள் எத்தனை முக்கியமோ, அதே அளவு ஒருநாட்டுக்கு உட்கட்டமைப்பு வசதியும் மிக முக்கியம். உட்கட்டமைப்பு துறையில் நாடு மிகப் பெரிய வளர்ச்சியை எட்டுவதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறோம். எனவே தான் நெடுஞ்சாலைகள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் ரயில்வே துறைகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

சேது பாரதம் திட்டம் மூலம் 208 ரயில்வே கிராஸிங்குகள் நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக மேம்பாலங்கள் கட்டப்பட்டும். 2019க்குள் இத்திட்டத்தை முடிக்க ரூ.20,800 கோடி செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது. மேலும் ஆங்கிலேயர்கள் காலத்தில் கட்டப்பட்ட பழமையான 1,500 மேம்பாலங்கள் புனரமைக்கப்படும். இதற்காக ரூ.30,000 கோடி செலவிடப்படவுள்ளது.

முதல் முறையாக நாட்டில் உள்ள ஒட்டுமொத்த பாலங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளது. முந்தைய அரசுகளிடம் கூட, இதற்கான தகவல் தளங்கள் இல்லை. ஆனால் பாலங்களை கணக்கிடுவதற்காக இந்திய பாலங்கள் மேலாண்மை முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த அமைப்பு நாடு முழுவதும் 1,50,000 பாலங்களை அடையாளம் கண்டு அதற்கான தகவல்களை சேகரித்துள்ளது.

சாலைகள் அகலப்படுத்துவது, நீட்டிப்பது போன்ற திட்டங்கள் கடந்த காலங்களில் நில ஆக்கிரமிப்பு பிரச்சினையால் நின்று போனது. தற்போது இதற்கான நிலங்கள் அனைத்தையும் அரசு திரும்பப் பெற்றுள்ளது. எனவே, சாலைகள் இனி விரைவாக விரிவாக்கம் செய்யப்படும்.

நெடுஞ்சாலைகளில் பயணிப்போரின் வசதிக்காக 25 கி.மீ தொலைவுக்கு ஓய்வு அறைகளை அமைக்கவும் திட்டமிட்டு வருகிறோம். மேலும் சுற்றுவட்டார கிராம மக்கள் நெடுஞ்சாலைகள் அருகே தங்களது பொருட்களை விற்பதற்கான மையங்கள் அமைக்கப்படும். ரயில்வே துறையிலும் மிகப் பெரிய அளவில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் பேசினார்.

SCROLL FOR NEXT