கோப்புப்படம் 
இந்தியா

செப். 12-ம் தேதி நடந்த இளநிலை நீட் தேர்வை ரத்து செய்க: உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

ஏஎன்ஐ

நாடு முழுவதும் கடந்த 12-ம் தேதி நடந்த மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாகவும், கேள்வித்தாள் வெளியானதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளதால், அந்தத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளான எம்பிபிஎஸ், பிடிஎஸ் மற்றும் ஆயுர்வேதா, யோகா மற்றும் இயற்கை மருத்துவம், சித்தா, ஹோமியோபதி ஆகிய படிப்புகளுக்கும், வெளிநாடுகளில் மருத்துவம் படிக்கச் செல்பவருக்கும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) நடத்தப்படுகிறது.

அதன்படி, நடப்பு ஆண்டுக்கான இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த 12-ம் தேதி நடைபெறுகிறது. இதற்காக நாடு முழுவதும் 3,862 மையங்களில், ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் 16 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வை எழுதினர்.

நீட் தேர்வில் நடக்கும் முறைகேடுகள், ஆள் மாறாட்டம், நவீன தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்தி முறைகேட்டில் ஈடுபடுதலைத் தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அப்படியிருந்தும் நீட் தேர்வுக்குப் பின் சில மாநிலங்களில் முறைகேடுகள் நடக்கின்றன.

இந்நிலையில் நீட் தேர்வு எழுதிய பல மாணவர்கள் சேர்ந்து, சமீபத்தில் நடத்தப்பட்ட நீட் இளநிலைத் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன என்றும், பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகச் செய்திகள் வந்துள்ளதால், அந்தத் தேர்வை ரத்து செய்து புதிதாக தேர்வு நடத்தக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

அந்த மனுவில் கூறுகையில், “கடந்த 12-ம் தேதி நீட் தேர்வின் போது, ராஜஸ்தானில் தேர்வு எழுதிய மாணவர்களில் 8 பேர் முறைகேட்டில் ஈடுபட்டதாக போலீஸார் கைது செய்துள்ளனர்.

இதில் 18 வயதான மாணவி தினேஷ்வரி குமாரி, கண்காணிப்பாளர் ராம்சிங், தேர்வு மையப் பொறுப்பாளர் முகேஷ் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் சட்டவிரோதமாக ஆதாயம் அடைவது அநீதியாகும்.

ஆதலால், மத்திய கல்வித்துறை அமைச்சகம், தேசிய தேர்வு அமைப்பு, தேசிய மருத்துவ ஆணையம் ஆகியவை தேர்வு நடத்துவதற்கான நிலையான வழிகாட்டி முறைகளை, பயோ மெட்ரிக் முறையில் மேம்படுத்த நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். மாணவர்களுக்கு பயோ-மெட்ரிக் முறையில் பரிசோதனை நடத்தி, ஜாமர்களைப் பயன்படுத்தி, வெளிப்படைத் தன்மையுடன் தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும்.

ஆதலால் முறைகேட்டுடன் நடத்தப்பட்ட இந்தத் தேர்வை ரத்து செய்து புதிய தேர்வை நடத்த வேண்டும். அந்த மனுவை விசாரித்து தீர்வு காணும்வரை, நீட் தேர்வுக்கான முடிவுகளை வெளியிடக் கூடாது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT