ஜம்மு காஷ்மீரின் உரி பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாதி ஒருவர் நேற்று முன்தினம் சுட்டுக் கொல்லப்பட்டார். மற்றொருவர் உயிருடன் பிடிக்கப்பட்டார்.
ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டம் உரி செக்டார், கட்டுப்பாட்டு எல்லைக் கோடு பகுதியில் 6 தீவிரவாதிகள் இந்திய எல்லைக்குள் அண்மையில் ஊடுருவ முயன்றனர். அவர்களை நோக்கி இந்திய ராணுவம் சுட்டதில் 4 தீவிரவாதிகள் பாகிஸ்தான் பகுதிக்குள் ஓடிவிட்டனர். இருவர் இந்திய எல்லைக்குள் ஊடுருவியதை ராணுவ வீரர்கள் கண்டனர்.
இவர்களை பிடிக்க இந்திய ராணுவத்தால் தொடர் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் உரி பகுதியில் நேற்று முன்தினம் மாலையில் இவ்விரு தீவிரவாதிகளும் சுற்றி வளைக்கப்பட்டனர். இதையடுத்து நடந்த மோதலில் ஒருவர் கொல்லப்பட்டார். மற்றொருவர் சரண் அடைந்தார்.
இது தொடர்பாக மேஜர் ஜெனரல் வீரேந்திர வாட்ஸ் கூறும்போது, “சரண் அடைந்த தீவிரவாதி காவலில் வைக்கப்பட்டுள்ளார். இவர், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தை சேர்ந்த அலி பாபர் பத்ரா என ஒப்புக்கொண்டுள்ளார். லஷ்கர் இ தொய்பா உறுப்பினரான இவர் முசாபராபாத்தில் பயிற்சி பெற் றுள்ளார்” என்றார்.