காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் முழு நேர தலைவராக, மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவராக உள்ள எஸ்.கே. ஹல்தர் நியமிக்கப்பட்டுள்ளார்.
கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா,புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்காக காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் அமைக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து மத்திய அரசு கடந்த 2018 ஜூன் 1-ம்தேதி காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தை அமைத்தது.
மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவரே இந்த ஆணையத்தின் தற்காலிக ஆணையராக செயல்பட்டு வந்தார். இதனால் கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பரில் தமிழக அரசு காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழு நேர தலைவரை நியமிக்குமாறு உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டது.
மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவரான எஸ்.கே.ஹல்தர் கடந்த ஜனவரியில் காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தின் இடைக்கால தலைவராக நியமனம் செய்யப்பட்டார். இவரது பதவிக் காலம் வரும் 30-ம் தேதியுடன் நிறைவடைவதால் காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழு நேரத் தலைவரை நியமிப்பது தொடர்பாக மத்திய அரசு பரிசீலித்து வந்தது.
இந்நிலையில் நேற்று மத்திய பணியாளர் மற்றும் ஓய்வூதிய அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘‘காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் முழு நேர தலைவராக சவுமித்ரா குமார் ஹல்தர் நியமிக்கப்படுகிறார். 5 ஆண்டுகளுக்கு அல்லது அடுத்த உத்தரவு வரும் வரை இவர் தலைவராக செயல்படுவார். இவர்வரும் நவம்பர் 30-ம் தேதி பணியில் இருந்து ஓய்வு பெற்றாலும்,ஆணையத்தின் தலைவராக நீடிப்பார்''என தெரிவிக்கப்பட்டுள்ளது.