சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மகாராஷ்டிர மாநில முன்னாள் துணை முதல்வர் சகன் புஜ்பாலை நாளை வரை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியது.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சகன் புஜ்பால், மகாராஷ்டிரா சதன் ஊழல் வழக்கு விசாரணைக்காக அமலாக்கத் துறை அதிகாரிகள் முன்பு நேற்று முன்தினம் ஆஜரானார். அப்போது அவரை அமலாக்க பிரிவினர் கைது செய் தனர். இதையடுத்து புஜ்பாலை நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தி னர்.
தொடர்ந்து விசாரணை நடத்த வேண்டி இருப்பதால் அவரை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து விசாரிக்க அனுமதி கோரினர். இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், நாளை வரை தங்கள் கட்டுப் பாட்டில் வைத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அனுமதி வழங்கியது.
மகாராஷ்டிராவில் கடந்த காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது, டெல்லி யில் ரூ.100 கோடி செலவில் மகாராஷ்டிரா சதன் கட்டிடம் கட்டப்பட்டது. இதில் முறைகேடு நடைபெற்றதாக அப்போதைய பொதுப்பணித் துறை அமைச்சர் புஜ்பால் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இதுதொடர்பாக புஜ்பால் உட்பட 17 பேர் மீது மாநில ஊழல் தடுப்புப் பிரிவு வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த விவகாரத் தில் சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.