இந்தியா

‘‘நான் ஏற்கெனவே  சொன்னேன்’’- பெயர் சொல்லாமல் சித்துவை கிண்டல் செய்த அம்ரீந்தர் சிங்

செய்திப்பிரிவு

பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகியுள்ள நவ்ஜோத் சிங் சித்துவை பெயர் குறிப்பிடாமல் முன்னாள் முதல்வர் அம்ரீந்தர் சிங் கிண்டல் செய்துள்ளார்.

பஞ்சாப் சட்டப்பேரவைக்கு இன்னும் 5 மாதங்களில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கட்சித் தலைமை உத்தரவையேற்று அம்ரீந்தர் சிங் பதவியில் இருந்து விலகினார்.

இதனையடுத்து சரண்ஜித் சிங் சன்னி புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து அம்ரீந்தர் சிங் பாஜகவில் இணையப் போவதாக தகவல்கள் வெளியாகின. அவர் இரண்டு நாள் பயணமாக டெல்லி செல்கிறார். அப்போது பாஜக தலைவர் ஜேபி நட்டா மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்திக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த பரபரப்பான சூழலில் பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் பதவி விலகியுள்ளார். சித்து கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளார். இதுகுறித்து அம்ரீந்தர் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:

‘‘நான் ஏற்கெனவே உங்களுக்கு சொன்னேன். அவர் ஒரு நிலையான எண்ணம் கொண்ட மனிதர் அல்ல. எல்லை மாநிலமான பஞ்சாபுக்கு பொருத்தமானவராக இருக்க மாட்டார்’’ எனக் கூறினார். எனினும் தனது ட்விட்டர் பதிவில் சித்துவின் பெயரை அவர் குறிப்பிடவில்லை.

SCROLL FOR NEXT