இந்தியா

டெல்லி செல்லும் அம்ரீந்தர் சிங்; பாஜக தலைவர்களை சந்திக்கிறாரா?

செய்திப்பிரிவு

பஞ்சாப் முன்னாள் முதல்வர் அம்ரீந்தர் சிங் டெல்லியில் பாஜக தலைவர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில் இதனை அவரது ஊடக ஆலோசகர் ரவீன் துக்ரல் மறுத்துள்ளார்.

பஞ்சாப் காங்கிரஸில் நீண்ட காலமாக உட்கட்சிப் பூசல் வலுத்து வந்தது. இதனால், நவ்ஜோத் சிங் சித்து பஞ்சாப் காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டார்.

ஆனால் அதன் பின்னரும் கூட பஞ்சாப் காங்கிரஸில் பூசல் நின்றபாடில்லை. முதல்வராக இருந்த அம்ரீந்தருக்கு எதிராகச் சில அமைச்சர்கள் போர்க்கொடி தூக்கினர். சிரோன்மணி அகாலி தளம் தலைவர் சுக்பீர் சிங் பாதலுடன் அமரீந்தர் கைகோத்துச் செயல்படுகிறார் என்று கட்சிக்குள் அதிருப்தி எழுந்தது.

பஞ்சாப் சட்டப்பேரவைக்கு இன்னும் 5 மாதங்களில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கட்சித் தலைமை உத்தரவையேற்று அம்ரீந்தர் சிங் பதவியில் இருந்து விலகினார். தனது ராஜினாமா குறித்து அமரீந்தர் சிங் அளித்த பேட்டியில் "நான் கட்சியில் மூன்று முறை அவமானப்படுத்தப்பட்டுள்ளேன். என் மீது ஏதோ ஐயப்பாடு கட்சி தலைமைக்கு இருக்கிறது. இது எனக்கு மிகப்பெரிய அவமானம்’’ எனக் கூறினார்.

இதனையடுத்து பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் சுனில் ஜாக்கர், மூத்த காங்கிரஸ் தலைவர் அம்பிகா சோனி ஆகியோர் பெயர் பரிசீலிக்கப்பட்டது. ஆனால் சரண்ஜித் சிங் சன்னி புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.

இந்தநிலையில் அம்ரீந்தர் சிங் பாஜகவில் இணையப் போவதாக தகவல்கள் வெளியாகின. இந்தநிலையில் அவர் இரண்டு நாள் பயணமாக டெல்லி செல்கிறார். அப்போது பாஜகவின் மூத்த தலைவர்கள் இருவரை சந்தித்து பேசவுள்ளதாக தகவல் வெளியானது.
பாஜக தலைவர் ஜேபி நட்டா மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அமரீந்தர் சிங்கின் டெல்லி வருகை தனிப்பட்டது, இதில் ஊகம் தேவையில்லை என அம்ரீந்தர் சிங்கின் ஊடக ஆலோசகர் ரவீன் துக்ரல் இன்று ட்வீட் செய்துள்ளார்.

அவரது பதிவில் ‘‘அம்ரீந்தர் சிங் மூத்த அரசியல்வாதி - காங்கிரஸின் மிக உயர்ந்த முகம் அவருடையது. நேரு குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமானவர். எனவே இந்த சந்தேகம் வேண்டாம்.

கேப்டன் அமரீந்தரின் டெல்லி வருகை மிகவும் அதிகமாக பேசப்படுகிறது. அவர் தனிப்பட்ட முறையில் பயணம் செய்கிறார். அப்போது அவர் சில நண்பர்களைச் சந்திக்கிறார். தேவையற்ற ஊகங்கள் தேவையில்லை" எனக் கூறினார்.

SCROLL FOR NEXT