புதுச்சேரியில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட செல்வகணபதிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:
“புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினா் தோ்தலில் முதல் முறையாக பாஜக வேட்பாளா் செல்வகணபதி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நமது கட்சியில் உள்ள அனைத்து பாஜக உறுப்பினர்களுக்கும் பெருமை அளிக்கும் விஷயமாகும். புதுச்சேரி மக்கள் நம் மீது வைத்துள்ள நம்பிக்கை மகிழ்ச்சி அளிக்கிறது. புதுச்சேரியின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபடுவோம்” என்று கூறியுள்ளார்.
இதுபோலவே மாநிலங்களவை உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சர்பானந்த சோனோவால் மற்றும் எல் முருகனுக்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் “அசாம் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எனது அமைச்சரவை சகாக்கள் சர்பானந்த சோனோவால் மற்றும் எல். முருகனுக்கு எனது வாழ்த்துக்கள். நாடாளுமன்ற நடவடிக்கைகளை அவர்கள் செழுமைப்படுத்துவார்கள். பொது மக்களின் நலனுக்கான பணிகளை மேலும் மேலும் மேம்படுத்துவார்கள் என்றும் நான் நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.