டெல்லியில் கட்டப்பட்டு வரும் புதிய நாடாளுமன்றப் பணிகளை பிரதமர் மோடி ஆய்வு செய்த காட்சி | படம் உதவி: ட்விட்டர். 
இந்தியா

மருத்துவமனை கட்டும்போது பிரதமர் மோடி நேரில் சென்று பார்த்துள்ளாரா? புதிய நாடாளுமன்றப் பணிகள் ஆய்வு குறித்து காங்கிரஸ் கேள்வி

செய்திப்பிரிவு

புதுடெல்லியில் புதிய நாடாளுமன்றம் கட்டும் பணிகளை ஆய்வு செய்த பிரதமர் மோடி, என்றாவது மருத்துவமனை கட்டும் பணிகளை, ஆக்சிஜன் பிளாண்ட் அமைக்கும் பணிகளை ஆய்வு செய்துள்ளாரா என்று காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

சென்ட்ரல் விஸ்டா திட்டத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் புதிய நாடாளுமன்றக் கட்டிடம், மத்திய தலைமைச் செயலகம் ஆகியவை கட்டப்பட உள்ளன.

புதிய நாடாளுமன்றம் கட்டும் திட்டத்தின் மதிப்பு ரூ.971 கோடியாகும். 21 மாதங்களில் அதாவது 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்குள் 75-வது சுதந்திர தினம் கொண்டாடுவதற்குள் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தப் புதிய நாடாளுமன்றம் கட்டும் பணிகள் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி நடந்து வருகின்றன. இந்தக் கட்டிடப் பணிகளை ஆய்வு செய்ய பிரதமர் மோடி நேற்று முன்தினம் இரவு சென்றார்.

அங்கு கட்டிடப் பணிகளைக் கண்காணித்த பிரதமர் மோடி ஒரு மணி நேரம் வரை இருந்து அனைத்துப் பணிகளையும் ஆய்வு செய்தார். கட்டிடம் கட்டும் இடத்தில் இருக்கும் மேற்பார்வையாளர்கள், அதிகாரிகளிடம் பணிகள் குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்தார்.

புதிய நாடாளுமன்றப் பணிகளை பிரதமர் மோடி ஆய்வு செய்தது குறித்து காங்கிரஸ் கட்சி விமர்சித்துக் கேள்வி எழுப்பியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

பவன் கேரா

''புதிய நாடாளுமன்றம் கட்டும் பணிகளை பிரதமர் மோடி நேரில் ஆய்வு செய்துள்ளார். நாங்கள் கேட்கிறோம், கரோனா 2-வது அலை உச்சத்தில் இருந்தபோது, நாட்டில் கட்டப்பட்டு வந்த எந்த மருத்துவமனைப் பணிகளையாவது பிரதமர் மோடி ஆய்வு செய்துள்ளாரா? மருத்துவமனைகளில் அமைக்கப்பட்ட ஆக்சிஜன் பிளாண்ட் திட்டத்தை எங்காவது நேரில் சென்று பிரதமர் மோடி ஆய்வு செய்துள்ளாரா?

மக்கள் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தார்கள். அந்த சோகத்திலிருந்து இன்னும் மக்கள் மீளவில்லை, கரோனா 2-வது அலை உருவாக்கிய வலியிலிருந்து மக்கள் முழுமையாக வெளியே வரவில்லை.

மக்கள் தங்கள் அன்புக்குரியவர்களை கரோனாவில் இழந்து நிற்கிறார்கள், ஒவ்வொருவரையும் கரோனாவிலிருந்து காக்கப் போராடினோம். ஆனால், அதை மறந்துவிட்டு, பிரதமர் மோடி, ரூ.30 ஆயிரம் கோடி சென்ட்ரல் விஸ்டா திட்டத்தை நேரடியாக ஆய்வு செய்கிறார். எந்த நேரத்தில் இதுபோன்ற ஆய்வை பிரதமர் மேற்கொள்கிறார் என்ற நேரம்தான் கேள்விக்குள்ளாகிறது.

பிரதமர் மோடி, கரோனா காலத்தில் அவசரமாகக் கட்டப்பட்ட மருத்துவமனைப் பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்திருந்தால், அவருக்கு நாங்கள் ஆதரவு தருவோம். ஆதலால் மன்னியுங்கள், பிரதமரின் நடவடிக்கைக்கு ஆதரவு தர முடியாது. அர்த்தமில்லாத செய்கை, உணர்வற்ற ரீதியிலான செயல்”.

இவ்வாறு பவன் கேரா தெரிவித்தார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் ட்விட்டரில், புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை பிரதமர் மோடி ஆய்வு செய்த காட்சி குறித்த புகைப்படத்தைப் பதிவிட்டுக் கூறுகையில், “சர்வயக்னியின் வித்தியாசமான அவதாரங்களில் ஒன்று. எந்த கவனத்தையும் புகைப்படம் மாற்றிவிடும்” எனத் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT