கோப்புப்படம் 
இந்தியா

201 நாட்களுக்குப் பின் இந்தியாவில் தினசரி கரோனா தொற்று 20 ஆயிரத்துக்குக் கீழ் சரிந்தது

ஏஎன்ஐ

இந்தியாவில் தினசரி கரோனா தொற்று 201 நாட்களுக்குப் பின் 20 ஆயிரத்துக்கும் கீழ் சரிந்தது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

''கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் புதிதாக 18 ஆயிரத்து 795 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்த பாதிப்பு 3 கோடியே 36 லட்சத்து 97 ஆயிரத்து 581 ஆக அதிகரித்துள்ளது.

ஒட்டுமொத்தமாக சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2 லட்சத்து 92 ஆயிரத்து 206 ஆக அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்த பாதிப்பில் சிகிச்சையில் இருப்போர் வீதம் 0.87 சதவீதமாகக் குறைந்துள்ளது.

கரோனாவிலிருந்து இதுவரை 3 கோடியே 29 லட்சத்து 58 ஆயிரத்து 2 பேர் குணமடைந்தனர். குணமடைந்தோர் சதவீதம் 97.81 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 3,586 பேர் சிகிச்சையிலிருந்து குணமடைந்து சென்றுள்ளனர்.

கடந்த ஆண்டு மார்ச் மாதத்துக்குப் பின் கரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை இந்த அளவுக்குக் குறைந்தது இதுதான் முதல் முறையாகும். கடந்த 24 மணி நேரத்தில் 7,414 பேர் கரோனா சிகிச்சையிலிருந்து குணமடைந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் 179 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 4 லட்சத்து 47 ஆயிரத்து 373 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 193 நாட்களுக்குப் பின் கரோனா உயிரிழப்பு குறைந்தது இதுதான் முதல் முறையாகும்.

நாட்டில் இதுவரை ஏறக்குறைய 56.57 கோடி பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 13 லட்சத்து 21 ஆயிரத்து 780 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டது. 87 கோடி பேருக்கும் அதிகமாகத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ஒரு கோடி பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது''.

இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT