இந்தியா

1-ம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை: கேரளா ஆசிரியருக்கு 29 ஆண்டு சிறை

செய்திப்பிரிவு

கேரளாவில் 1-ம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியருக்கு 29 ஆண்டு மற்றும் 6 மாதம் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கேரளா மாநிலம் திருச்சூரில் உள்ள புதுமனசேரி என்ற இடத்தில் உள்ள தனியார் பள்ளியில் நீதிபோதனை பாடம் கற்பிக்கும் ஆசிரியராக பணியாற்றியவர் அப்துல் ரபீக். இவர் கடந்த 2012-ம் ஆண்டில் மாணவர்களை சுற்றுலா அழைத்துச் சென்று திரும்பும்போது பேருந்தில் தூங்கிக் கொண்டிருந்த 1-ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார்.

இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் அப்துல் ரபீக் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிராக திருச்சூரில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. விசாரணையில் அப்துல் ரபீக் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தது சாட்சியங்கள் மற்றும் அறிவியல் ஆதாரங்கள் அடிப்படையில் நிரூபணமானது. அப்துல் ரபீக்கிற்கு 29 ஆண்டுகள் மற்றும் 6 மாதங்கள் சிறை தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தவிர, அப்துல் ரபீக்கிற்கு ரூ.2.5 லட்சம் அபராதம் விதித்த நீதிமன்றம், கட்டத் தவறினால் மேலும் 2 ஆண்டுகள் 9 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

SCROLL FOR NEXT