இந்தியா

திருப்பதி பிரம்மோற்சவத்தில் பங்கேற்க ஜெகனுக்கு அழைப்பு விடுத்த தேவஸ்தானம்

செய்திப்பிரிவு

அமராவதி: திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் கரோனா நிபந்தனைகளின்படி, இம்முறை ஏகாந்தமாக நடத்தப்பட உள்ளது. வரும் அக்டோபர் மாதம் 7ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கும் ஏழுமலையானின் பிரம்மோற்சவ விழா, 15ம் தேதி கொடியிறக்க நிகழ்ச்சியுடன் நிறைவு பெற உள்ளது.

தினமும் கோயிலுக்குள் காலையும், மாலையும் வாகன சேவைகள் நடைபெற உள்ளன. இதில், காலம் காலமாக வரும் வழக்கப்படி, ஆந்திர அரசு சார்பில் மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி இம்முறை பட்டு வஸ்திரங்களை காணிக்கையாக வழங்க உள்ளார். வரும் அக்டோபர் மாதம் 11ம் தேதி இரவு கருட சேவை நடைபெற உள்ளது. ஆதலால், அன்றைய தினம் மாலை ஜெகன் மோகன் ரெட்டி தலையில் பட்டு வஸ்திரம் சுமந்து சென்று தேவஸ்தான அதிகாரிகளிடம் வழங்க உள்ளார்.

இதற்காக, நேற்று, திருமலை திருப்பதி தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி ஜவஹர் ரெட்டி, அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி. சுப்பாரெட்டி மற்றும் சிலர் அமராவதியில் உள்ள முதல்வரின் அலுவலகத்துக்கு சென்று, அவருக்கு பிரம்மோற்சவ அழைப்பிதழ் மற்றும் சுவாமியின் பிரசாதங்களை வழங்கி பிரம்மோற்சவத்துக்கு வரும்படி அழைப்பு விடுத்தனர்.

SCROLL FOR NEXT