இந்தியா

மின் தடை, தண்ணீர் பிரச்சினை: காங்கிரஸார் போராட்டம் - டெல்லி தலைமை செயலாளர் அலுவலகம் முற்றுகை

ஆர்.ஷபிமுன்னா

டெல்லியில் மின் தடை மற்றும் தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு காண வலியுறுத்தி, அம் மாநில காங்கிரஸார் தலைமை செயலா ளரை அவரது அலுவலகத்தில் முற்றுகையிட்டு திங்கள்கிழமை போராட்டம் நடத்தினர்.

டெல்லியில் நிலவும் கடும் வெயில் காரணமாக மின் தடை மற்றும் தண்ணீர் பிரச்சனை அதிகமாகி வருகிறது. இங்கு கடந்த மே 30-ல் வீசிய புழுதிப்புயலின் காரணமாக ஏற்பட்ட சேதங்கள் இன்னும் சரி செய்யப்படாமல் உள்ளன. இதனால் மேற்கு மற்றும் கிழக்கு டெல்லி பகுதிகளில் நாள் ஒன்றுக்கு ஐந்து முதல் பத்து மணி நேரம் மட்டும் மின்சாரம் கிடைப்பதாக புகார் எழுந்துள்ளது.

இதற்கு ஆம் ஆத்மி மற்றும் பாரதிய ஜனதா கட்சியினரின் கூட்டு சதியே காரணம் என காங்கிரஸார் புகார் எழுப்பினர். இவர்கள், மின்தடையை எதிர்த்து டெல்லி தலைமை செயலாளர் எஸ்.கே.ஸ்ரீவாஸ்தவாவை அவரது அலுவலகத்தில் சிறைபிடித்து போராட்டம் நடத்தினர். மாலை நான்கு மணி வரை போராட்டம் நீடித்த போதிலும், தலைமை செயலாளரை சந்திக்க யாரும் அனுமதிக்கப்படவில்லை.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட டெல்லி மாநில காங்கிரஸ் தலைவர் அர்விந்த்சிங் லவ்லி செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘இந்த இரண்டு பிரச்சனைகளில் அடுத்த 20 நாட்களுக்கு தம்மால் எதுவும் செய்ய முடியாது என தலைமை செயலாளர் கூறுகிறார். கடந்த 15 வருடங்களாக நீடித்த காங்கிரஸ் ஆட்சியில் இதுபோன்ற நிலை டெல்லிவாசிகளுக்கு ஏற்பட்டதில்லை. பொதுமக்கள் பிரச்சினைகளுக்காக சாலைகளில் இறங்கி போராடத் தயாராக உள்ளோம்’’ என்றார்.

டெல்லி மாநில காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் முகேஷ் சர்மா கூறுகையில், ‘‘இந்தப் பிரச்சினையில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட டெல்லிவாசிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் குடியரசு தலைவர் ஆட்சி நிலவுவதால் இந்தப் பிரச்சினைக்கு மத்தியில் ஆட்சி செய்யும் தேசிய ஜனநாயகக் கூட்டணிதான் பொறுப்பு’’ என்றார்.

இந்த நிலையை சரி செய்யும் பொருட்டு டெல்லி துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங், அங்குள்ள ஷாப்பிங் மால்களில் பத்து மணிக்கு பிறகும் சாலையோர மின் விளக்குகளை குறிப்பிட்ட நேரத்துக்குப் பிறகும் மின் தடையை அமல்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார். வீடு மற்றும் அலுவலகங்களில் இயங்கும் குளிர்சாதன இயந்திரங்களை 25 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கும் அதிகமான அளவுகளில் இயக்கும்படி பொதுமக்களை கேட்டுக் கொண்டிருக்கிறார். இவைகளை அரசு அலுவலகங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில் 3.30 முதல் 4.30 வரை ஒரு மணி நேரம் நிறுத்தி வைக்கும்படியும் நஜீப் ஜங் உத்தரவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT