இந்தியா

வேளாண் சட்டம்; பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயார்- அரசு தயாரில்லை: ராகேஷ் திகைத் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

நாடுமுழுவதும் நடத்த பந்த் போராட்டம் வெற்றி பெற்றுள்ளது, பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம், ஆனால் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாரில்லை என விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் திகைத் கூறினார்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும், வேளாண் சட்டங்கள் இயற்றப்பட்டு ஓராண்டு நிறைவை ஒட்டியும் விவசாயிகள் சங்கத்தின் சார்பில் நாடு முழுவதும் பாரத் பந்த்துக்கு அழைப்பு விடுத்தது.

இந்த பாரத் பந்த்துக்கு நாடு முழுவதும் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் சங்கங்கள் ஆதரவு தெரிவித்தன. 15 வர்த்தக அமைப்புகள், அரசியல் கட்சிகள், 6 மாநில அரசுகள், சமூகத்தின் பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்தனர்.

தமிழகம், சத்தீஸ்கர், கேரளா, பஞ்சாப், ஜார்க்கண்ட், ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் பாரத் பந்த்துக்கு ஆதரவு அளித்துள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்தியக் கம்யூனிஸ்ட், அனைத்து இந்திய ஃபார்வர்ட் பிளாக், புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி, ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சி, சமாஜ்வாதி, தெலுங்கு தேசம், மதச்சார்பற்ற ஜனதா தளம், பகுஜன் சமாஜ், தேசியவாத காங்கிரஸ் கட்சி, திமுக, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஸ்வராஜ் இந்தியா உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. வழக்கறிஞர்கள் சார்பில் பல்வேறு பார் கவுன்சில் அமைப்புகளும், யூனியன்களும் விவசாயிகளின் பாரத் பந்த்துக்கு ஆதரவு அளித்தன.

ஆனால், பெரும்பாலான மாநிலங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கையில் எந்தவிதமான சிக்கலும் இல்லை. டெல்லி, உத்தரப் பிரதேசம், பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களில் சில நகரங்களில் மட்டும் ரயில் போக்குவரத்து, பேருந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. டெல்லி உ.பி. மாநிலத்தை இணைக்கும் நெடுஞ்சாலைகள், எக்ஸ்பிரஸ் சாலைகளிலும் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

அதேசமயம், அவசரப் பணிகள், அத்தியாவசிய சேவைகள், மருத்துவமனைகள், மருந்துக்கடைகள், மீட்புப் பணி, நிவாரணப் பணிகள், தனிப்பட்ட அவசரப் பணிகளுக்குத் தடையில்லை என்றும் விவசாயிகள் அமைப்பு தெரிவித்து இருந்தன.

இந்தநிலையில் பந்த் குறித்து விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் திகைத் கூறியதாவது:

நாங்கள் நடத்திய பாரத் பந்த் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. நாடுமுழுவதும் எங்களுக்கு விவசாயிகளின் முழு ஆதரவு இருந்தது. மக்கள் நடமாட்டத்தை எளிதாக்க வேண்டியிருப்பதால் எல்லாவற்றையும் மூடி வைக்க முடியாது. அதனால் சில விலக்கு அளித்து இருந்தோம். இதன் காரணமாக சில மாநிலங்களில் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லை. நாங்கள் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம், ஆனால் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாரில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT