மனதின் குரல் வானொலி உரையில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
நாடு முழுவதும் நதிகளை மீட்க, தூய்மைப்படுத்த அரசும் தன்னார்வ தொண்டு அமைப்புகளும் இணைந்து செயல்பட்டு வருகின்றன. இதற்கு உதாரணமாக தமிழகத்தின் வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களை சுட்டிக் காட்ட விரும்புகிறேன். அந்த மாவட்டங்களின் நீர் ஆதாரமான நாகநதி பல ஆண்டுகளுக்கு முன்பே வறண்டுவிட்டது.
அப்பகுதி பெண்கள் ஒன்றிணைந்து நாகநதியை மீட்கும் பணியில் இறங்கினர். அவர்கள் மக்களை ஒன்று திரட்டினர், கால்வாய்களை தோண்டினர். தடுப்பணைகளை உருவாக்கினர், மறுசெறிவு குளங்களை வெட்டினர். இதன்விளைவாக இன்று நாகநதியில் தண்ணீர் ததும்பி ஓடுகிறது.
தேசத்தந்தை காந்தியடிகள் சபர்மதி நதிக்கரையில் ஆசிரமத்தை அமைத்தார். 10 ஆண்டுகளுக்கு முன்பே சபர்மதி நதி வறண்டுவிட்டது. ஓராண்டில் 7 மாதங்கள் வரை நதியில் தண்ணீர் இருக்காது. இதன்பிறகு நர்மதையும், சபர்மதியும் இணைக்கப்பட்டன, இன்று சபர்மதியில் தண்ணீர் நிறைந்திருக்கிறது.
தமிழக பெண்களைப் போன்று நாட்டின் பல்வேறு பகுதிகளில் நதிகளை மீட்கும் பணி நடந்து வருகிறது. நம்முடைய துறவிகள் நதிகள் மீட்பு, மரக்கன்று நடுதல் உள்ளிட்ட சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் நாக நிதியை மீட்கும் திட்டம் கடந்த 2014-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. வாழும் கலை அமைப்பின் முயற்சியால் தொடங்கப்பட்ட இந்த நதி மீட்பு திட்டத்தில் 20,000-க்கும் மேற்பட்ட பெண்கள் ஆர்வத்தோடு ஈடுபட்டு 3,500-க்கும் மேற்பட்ட மீள் கிணறு, மறுசெறிவு குளங்களை வெட்டினர். 250 தடுப்பணைகள் கட்டப்பட்டன. 5 ஆண்டு உழைப்பின் பலனாக நாகநதி மீண்டும் உயிர் பெற்றது.