இந்தியா

ஹரியாணா மாநிலத்தில் கபடி வீரர் சுட்டுக் கொலை: கேமராவில் பதிவானது

பிடிஐ

ஹரியாணா மாநிலத்தில் உள்ள ரோட்டக்கில் தேசிய அளவிலான கபடி வீரர் சுக்வீந்தர் சிங் (24) மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட காட்சி சிசிடிவி காமிராவில் பதிவாகியுள்ளது.

ரிதால் கிராமத்தில் உள்ள தன் வீட்டுக்கு கபடி வீரர் சுக்வீந்தர் சிங் தனது பயிற்சியை முடித்துக் கொண்டு திரும்பிய போது அவரது வீட்டினருகே இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தனர். செவ்வாயன்று மாலை நடந்த இந்த கொலை சம்பவம் வீட்டினருகே வைக்கப்பட்டிருந்த சிசிடிவி காமிராவில் பதிவாகியுள்ளது.

சிசிடிவி காட்சியில், சம்பவத்திற்கு முன்னால் கபடி வீரர் சுக்வீந்தர் சிங் மொபைல் போனில் பேசிக் கொண்டிருந்ததும், அப்போது ஸ்கூட்டரில் வந்த இருவர் அவரது மார்பு மற்றும் நெற்றியில் சுட்டு விட்டுச் சென்றதும், சுக்வீந்தர் உடனடியாக தரையில் சரிவதும் பதிவாகியுள்ளது.

அவருக்கு விரோதிகள் என்று யாரும் இல்லை என்று சுக்வீந்தரின் பெற்றோர் தெரிவித்தனர்.

வழக்கு பதிவு செய்யப்பட்டு கொலையாளிகளைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT