முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் | கோப்புப்படம் 
இந்தியா

அச்சமின்மை, புத்திசாலித்தனம் கற்க ஏராளம்: மன்மோகன் சிங் பிறந்தநாளில் ராகுல் காந்தி புகழாரம்

செய்திப்பிரிவு

அச்சமின்மை, புத்திசாலித்தனம் என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் இருந்து ஏராளமானவற்றை கற்கலாம் என்று அவரின் பிறந்தநாளில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி புகழாரம் சூட்டியுள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங்கிற்கு இன்று 89-வது பிறந்தநாளாகும். மாநிலங்களவை எம்.பியான மன்மோகன் சிங்கிற்கு காங்கிரஸ் கட்சியும், மூத்த தலைவர்களும் வாழ்த்துத்தெரிவித்துள்ளனர்.

காங்கிரஸ் கட்சி தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் “ தொலைநோக்குள்ளவர், அர்ப்பணிப்புள்ள தேசியவாதி, பேச்சாளர் டாக்டர் மன்மோகன் சிங், இந்தியாவின் தலைவராவதற்கு நீங்கள் தகுதியானவர். உங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.

காங்கிரஸ் கட்சியும், ஒட்டுமொத்த தேசமும் உங்களையும், உங்கள் பங்களிப்பையும் இன்றும், நாள்தோறும் வாழ்த்தும். அனைத்தும் செய்தமைக்கு உங்களுக்கு நன்றி” எனத் தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்ட கருத்தில் “ பிறந்தநாள் வாழ்த்துகள் மன்மோகன் சிங் ஜி. மன்மோகன் அச்சமில்லாதவர். நாடு சந்தித்துவரும் பிரச்சினைகளை புத்திசாலித்தனத்துடன் நன்கு புரிந்து கொண்டு செயல்படுபவர்.

அவரிடம் இருந்து அதிகமாக கற்க வேண்டும். அவர் நல்ல ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியுடனும் வாழ வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல், மூத்த தலைவர்கள் சச்சின் பைலட், முகுல் வாஸ்னிக், சல்மான் குர்ஷித் ஆகியோர் மன்மோகன் சிங்கிற்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT