இந்தியா

வெளிநாடு செல்ல விரும்புவோருக்கு கரோனா தடுப்பூசி சான்றிதழில் பிறந்த தேதி சேர்க்கப்படும்: மத்திய அரசு வட்டாரங்கள் தகவல்

செய்திப்பிரிவு

பிரிட்டனுக்கு பயணம் செல்வதற்கு அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி பட்டியலில் இந்தியாவின் கோவிஷீல்டு சேர்க்கப்படாமல் இருந்தது. இதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து அந்தப் பட்டியலில் கோவீஷீல்டு சேர்க்கப்படும் என கடந்த 22-ம் தேதி பிரிட்டன் அறிவித்தது. இதுகுறித்த புதிய விதிகள் வரும் அக்.4-ல் அமலுக்கு வருகின்றன.

இந்நிலையில், இந்தியா, பிரிட்டன் இடையே கரோனா தடுப்பூசி சான்றிதழை ஏற்பது தொடர்பாக பேச்சு நடந்து வரும் நிலையில் இது தொடர்பாக மத்திய அரசு ஆலோசனை நடத்திவருகிறது. தற்போது தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மத்திய அரசு சார்பில் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. இந்தகோவின் சான்றிதழில் தடுப்பூசிசெலுத்தியவரின் மற்றவிவரங்கள் அடிப்படையில் வயது குறிப்பிடப்படுகிறது. ஆனால், மத்திய அரசுபுதிதாக உலக சுகாதார அமைப்பின் வழிமுறையின்படி புதிய வசதியை ஏற்படுத்த உள்ளது.

இது அடுத்த வாரத்தில் இருந்து நடைமுறைக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் வெளிநாடு செல்லும்போது அவர்களின் விருப்பத்தின் பேரில் பிறந்த தேதி பதிவுசெய்து தரப்படும் என்று தெரிகிறது.

இதுதொடர்பாக மத்திய அரசுவட்டாரங்கள் கூறும்போது “கோவின் இணையதளத்தில் புதிய வசதியை ஏற்படுத்த முடிவுசெய்யப்பட்டுள்ளது. இதன்படி, முழுமையாக 2 டோஸ் தடுப்பூசிசெலுத்தியவர்கள் வெளிநாடு செல்ல விரும்பினால், அவர்களுக்கு தடுப்பூசி சான்றிதழில் பிறந்த தேதி குறிப்பிடப்படும். இது விரைவில் அமலுக்கு வரும்”எனத் தெரிவிக்கின்றன.

SCROLL FOR NEXT