கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் சென்னராயபட்டணா அருகே தின்டகூரு என்ற கிராமம் உள்ளது. அங்கு மாதே கவுடா என்பவர் உணவகம் நடத்தி வருகிறார்.
கடந்த 15-ம் தேதி அதே கிராமத்தை சேர்ந்த சந்தோஷ் (26)தனது நண்பர்களுடன் உணவகத்துக்கு சென்றுள்ளார். அப்போது அதன் உரிமையாளர் மாதே கவுடா,உணவகத்தில் தலித் மக்களுக்கு அனுமதி இல்லை. பார்சல் வாங்கி போகலாம்' எனக் கூறியுள்ளார்.
இதுகுறித்து சந்தோஷ் சென்னராயப்பட்டணா வட்டாட் சியர், ஹாசன் மாவட்ட ஆட்சியர்,சமூக நலத்துறை அதிகாரிகளிடம் தீண்டாமை கடைபிடிக்கப்படுவதாக புகார் அளித்தார்.
இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்காததால் ஹாசன் மாவட்ட பீம் ஆர்மி அமைப்பின் செய லாளர் நடராஜ் தலைமையில் தலித் மக்கள் ஆர்ப்பாட்டமும் நடத்தினர்.
இதையடுத்து, வட்டாட்சியர் ஜே.பி.மாருதி, சமூக நலத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது உணவகத்தில் தீண்டாமை கடைபிடிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. அதன்பின் உணவகத்துக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும் இதுகுறித்து எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரிக்க போலீஸாருக்கு வட்டாட்சியர் உத்தரவிட்டார்.