இந்தியா

சக்திமான் குதிரையை தாக்கிய பாஜக எம்எல்ஏ மீது நடவடிக்கை: மத்திய அமைச்சர் மேனகா வலியுறுத்தல்

ஏஎன்ஐ

உத்தராகண்ட் காவல் துறையில் பணியாற்றி வந்த சக்திமான் குதிரையை தாக்கிய பாஜக எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அக்கட்சியின் மத்திய அமைச்சர் மேனகா காந்தி வலியுறுத்தி உள்ளார்.

கடந்த 2 தினங்களுக்கு முன்பு டேராடூனில் மாநில அரசுக்கு எதிராக, பாஜக சார்பில் போராட்டம் நடைபெற்றது. அப்போது, பாஜக எம்எல்ஏ கணேஷ் ஜோஷி தாக்கியதில் சக்திமான் குதிரையின் கால் முறிந்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து டேராடூன் காவல் துறை மூத்த கண்காணிப்பாளர் சதாநந்த் டேட் கூறும்போது,

“சக்திமான் காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் அதனால் நிற்க முடியவில்லை. அதன் நிலை மோசமாக உள்ளதால் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் கூடுதல் ஆதாரங்களை திரட்டி வருகிறோம். தேவைப்பட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

இதனிடையே, குதிரையை தாக்கிய எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான மேனகா காந்தி தலைமையிலான விலங்குகள் நல அமைப்பு (பிஎப்ஏ) வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக கட்சித் தலைமையை சந்தித்து முறையிடப்போவதாக மேனகா தெரிவித்துள்ளார்.

சக்திமான் குதிரையை கணேஷ் ஜோஷி நேற்று பார்வையிட்டார். பின்னர் அவர் கூறும்போது, “சக்தி மானை நான் தாக்கவில்லை. அரசியல் உள்நோக்கத்துடன் என் மீது பழி சுமத்தப்பட்டுள்ளது.

சக்திமானுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க டெல்லிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளேன்” என்றார்.

SCROLL FOR NEXT