கோப்புப்படம் 
இந்தியா

பிஎம் கேர்ஸ் அரசாங்கத்துக்கு சொந்தமில்லாதபோது ஏன் அரசு ஊழியர்களை நிதியளிக்க அரசு கோருகிறது: எதிர்க்கட்சிகள் கேள்வி

செய்திப்பிரிவு

பிஎம் கேர்ஸ் நிதியம் அரசாங்கத்துக்குச் சொந்தமில்லாதபோது, அதற்கு நிதியளியுங்கள் என்று அரசின் பல்வேறு துறைகள் ஏன் கோருகின்றன என்று மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.

அதுமட்டுமல்லாமல் பிஎம் கேர்ஸ்நிதி குறித்து வெளிப்படைத்தன்மை இருப்பது அவசியம், அரசு ஊழியர்களை ஏன் நிதியளிக்கக் கோருகிறார்கள், அரசின் இணையதளங்களும் நிதியளிக்க விளம்பரம் ஏன் செய்கின்றன என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.

பிஎம் கேர்ஸ் நிதியம் குறித்து வழக்கில் கடந்த வாரம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் தாக்கல் செய்த மனுவில், “ பிஎம் கேர்ஸ் மத்திய அரசுக்கு சொந்தமானது அல்ல” எனத் தெரிவித்திருந்தது. இதைத்தொடர்ந்து எதிர்க்கட்சிகள் பல்வேறு கேள்வி்களை எழுப்பி வருகின்றன.

அரசின் அதிகாரபூர்வ இணையதங்கள், அரசின் செலவினத்துறை, நிதித்துறை, அரசி் அதிகாரபூர்வ போர்டல்கள் அனைத்திலும் இன்னும் பிஎம் கேர்ஸுக்கு நன்கொடை அளியுங்கள் என விளம்பரம் வெளியிடப்பட்டு வருகிறது.

பிஎம் கேர்ஸ் நிதியத்துக்கு நன்கொடை வழங்கிடுங்கள் என கடந்த ஆண்டு மார்ச் மாதம் விளம்பரம் செய்யப்பட்டு இன்னும் தொடர்ந்து விளம்பரம் தொடர்ந்து வருகிறது.

அதுமட்டுமல்லாமல் அரசு ஊழியர்களும் தங்களின் ஒருநாள் ஊதியத்தை பிஎம் கேர்ஸ் நிதியத்துக்கு கரோனா நன்கொடை வழங்கிட வேண்டும் என்றும் மத்திய அ ரசு அறிவுறுத்தியது.

இது தொடர்பாக கடந்த ஆண்டு ஏப்ரல் 16ம் தேதி மத்திய உள்துறை செயலாளர் ராஜீவ் கவுபா அனைத்து அமைச்சகங்கள், துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள் செயலாளர்கள் ஆகியோருக்கு கடிதம் எழுதி அரசு ஊழியர்கள் நன்கொடை வழங்கிடக் கோரியிருந்தார். இது தொடர்பாக கடந்த ஆண்டு ஏப்ரல் 22ம் தேதி ஐஏஎஸ் அதிகாரிகள் கூட்டமைப்பும், பிஎம் கேர்ஸ்நிதியத்துக்கு நன்கொடை வழங்க ஆதரவு தெரிவிப்பதாகத் ட்விட்டில் தெரிவித்திருந்தது.

மத்திய அரசின் மூத்த அதிகாரிகள் இருவர் கூறுகையில் “ ஊழியர்கள் தாமாக முன்வந்து நன்கொடை வழங்க அமைச்சகங்கள் உத்தரவுபிறப்பித்திருந்தன. ஆனால், அது பிஎம் கேர்ஸ் நிதியம் அரசாங்கத்துக்குசொந்தமானது அல்ல என்று அப்போது தெரியாது” எனத் தெரிவித்தார்.

டெல்லி உயர் நீதிமன்றத்தில் பிரதமர் அலுவலகத்தில் இணைச் செயலாளர் தாக்கல் செய்த பிரமாணத்திரத்தில் பிஎம் கேர்ஸ் நிதியம் அரசாங்கத்துக்கு சொந்தமானது அல்ல என அறிவித்தபின் எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன.

சீதாராம் யெச்சூரி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ 2020 ஏப்ரல் மாதம் மத்திய அரசு அறிவிப்பில் 2021 மார்ச் மாதம் வரை அரசு ஊழியர்கள் தங்கள் ஊதியத்தில் ஒருநாள் ஊதியத்தை நன்கொடையாக வழங்கிட வேண்டும் எனத் தெரிவித்திருந்தது. பிஎம் கேர்ஸ் நிதி அரசாங்கத்துக்குச் சொந்தமானது அல்ல என்றால், எதற்காக அந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. இந்த கொள்ளை நிறுத்தப்பட வேண்டும், அதில் உள்ள நிதி அனைத்தும் தணிக்கை செய்யப்பட்டு கணக்கில் கொண்டுவரப்பட வேண்டும் ” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவரும், கட்சியின் தலைமைக் கொறாடாவான ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில் “ ஒரு நிதியம் பிரதமருக்காக, பிரதமரால், பிரதமரே நிர்வாகிக்கப்படுகிறது. ஒரு நிதியம் பிரதமர் பெயரிடப்பட்டுள்ளது ஆனால் அரசின் நிதி அல்ல. என்ன நகைச்சுவை, மக்களுக்கு எவ்வளவு உதாசினப்படுத்துகிறார்கள்.

ஜெய்ராம் ரமேஷ்

பிஎம் கேர்ஸ் நிதியை ஏன் இந்தியத் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் தணிக்கைக்கு உட்படுத்த முடியாது என்பது புரிந்துகொள்ள முடியாமல் இருக்கிறது. அரசாங்கத்தின் சொந்த உரிமைகோரல் உண்மையாக இருந்தால் நிதி வெளிப்படைத்தன்மை கடைபிடிக்கிறதா. இந்த நிதி எங்கிருந்து வந்தது, எவ்வாறு செலவிடப்படுகிறது என்பது விடைதெரியாமல் இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி ராஜா கூறுகையில் “ கடந்த காலத்தில், நாடாளுமன்றத்தின் உள்ளேயும், வெளியேயும் பிஎம் கேர்ஸ் நிதி குறித்து கேள்விகள் எழுந்தன. பிரதமரின் தனிப்பட்ட நிதியி்ல்லை, தனியார் நிதியில்லை, கட்சியின் நிதியும் இல்லை. மக்கள் ப ங்களிப்பால் உருவான நிதி. இந்த நிதியத்துக்கு பங்களிப்புச் செய்தவர்கள் அனைவரின் பெயரை வெளியிடுவதும், எவ்வாறு செலவிடப்பட்டது என்பதை தெரிவிப்பதும்தான் வெளிப்படைத்தன்மையாகும்” எனத் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT