குடியரசுத் தலைவர் ராம்நாத்கோவிந்த்தை ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.
தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி, செப்.18-ம் தேதி பதவியேற்றார். பதவியேற்ற போது, ‘‘அரசியலமைப்புச் சட்டத்தில் எனக்கு அளிக்கப்பட்ட வரம்புகளுக்கு உட்பட்டு செயல்படுவேன்’’ என்று தெரிவித்திருந்தார். தொடர்ந்து, அவர் கடந்த 21-ம் தேதி தமிழக டிஜிபி சைலேந்திரபாபுவை வரவழைத்து, தமிழக சட்டம்-ஒழுங்கு நிலவரம் உள்ளிட்டவிவரங்களைக் கேட்டறிந்தார்.
இந்நிலையில், நேற்று காலை அவர் டெல்லி புறப்பட்டுச் சென்றார். நேற்று மாலை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த்தை மரபு அடிப்படையில் சந்தித்து பேசினார். இன்று குடியரசு துணைத்தலைவர் வெங்கய்ய நாயுடு, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்திக்க திட்டமிட்டுள்ளார்.