இந்தியா

மக்களவை முன்னாள் சபாநாயகர் பி.ஏ.சங்மா மறைவு

பிடிஐ

மக்களவை முன்னாள் சபாநாயகர் பி.ஏ.சங்மா (68) மாரடைப்பு காரணமாக டெல்லியில் நேற்று காலை காலமானார். மேகாலயா மாநிலத்தின் துரா தொகுதியில் இருந்து மக்களவைக்கு 9 முறை தேர்ந் தெடுக்கப்பட்டவர் சங்மா.

16-வது மக்களவையில் 1996 முதல் 1998 வரை சபாநாயகராக இருந்தார். 1988 முதல் 1990 வரை மேகாலயா முதல்வராகவும் பதவி வகித்துள்ளார். ராஜீவ் காந்தி தலைமை யிலான அரசில் இணை அமைச் சராகவும், பி.வி.நரசிம்மராவ் அரசில் தொழிலாளர் நல அமைச்சராகவும் பதவி வகித்தார்.

1999-ல் சோனியா காந்திக்கு எதிரான செயல்பாடுகள் காரண மாக சரத் பவார், தாரிக் அன்வர் ஆகியோருடன் சங்மா, கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் தேசியவாத காங்கிரஸ் கட்சியை இவர்கள் தோற்றுவித்தனர்.

பின்னர் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் சிறிது காலம் இருந்த அவர், 2013-ல் தேசிய மக்கள் கட்சியை தோற்றுவித்தார். சங்மா வுக்கு மனைவி, 2 மகன்கள், 1 மகள் உள்ளனர். சங்மா மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மக்களவையில் நேற்று காலை உறுப்பினர்கள் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

பி.ஏ.சங்மா மறைவையொட்டி, மாநிலங்களவையில் அமைச்சர் கள் அருண் ஜேட்லி, முக்தார் அப்பாஸ் நக்வி, மார்க்சிஸ்ட் கட்சி சீதாராம் யெச்சூரி, காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் உள்ளிட்டோர் அவையை ஒத்திவைக்கக் கோரினர்.

‘மேலவையின் தற்போதைய உறுப்பினர் மறைந்தால் மட்டுமே ஒத்தி வைக்க விதி அனுமதிக் கிறது. முந்தைய நிகழ்வுகளை நான் படித்தேன். தற்போது விதிகளுக்கு அப்பால் சிறப்பு நடைமுறை பின்பற்றப்பட வேண்டுமா?’ விதிப்படி செயல் படவே விருப்பம். முன்னாள் அவைத் தலைவர் பல்ராம் ஜக்கார் மறைவின்போது ஏன் ஒத்தி வைக்கப்படவில்லை. ஒவ்வொரு தலைவருக்கும் ஒவ்வொரு மாதிரியான நடைமுறையைப் பின்பற்ற முடியாது” என அன்சாரி தெரிவித்தார்.

பின்னர் உறுப்பினர்களின் கோரிக்கை ஏற்கப்பட்டு, இதுவரை இல்லாத நடைமுறையாக அவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.

SCROLL FOR NEXT