இந்தியா

கரோனாவால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் தர வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

கரோனாவால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரணத் தொகையாக வழங்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாதே கூறியதாவது:

கரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு மத்திய அரசு ரூ.5 லட்சம் நிவாரண நிதியாக தர வேண்டும். நிறைய குழந்தைகள் அவர்களின் பெற்றோரை இழந்துள்ளனர். நிறைய பேர் கரோனாவால் வேலையிழந்துள்ளனர். இந்நிலையில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு வெறும் ரூ.50,000 அறிவித்துள்ளது கேலிக்கூத்தாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

கரோனா வைரஸ் தொற்றை மத்திய அரசு பேரிடராக அறிவிக்க மறுக்கிறது. அவ்வாறு அறிவித்தால், நிவாரண நிதியாக ரூ.4 லட்சம் தர வேண்டிவரும். அதைத் தவிர்க்கவே மத்திய அரசு அவ்வாறு அறிவிக்கவில்லை என்று காங்கிரஸ் ஏற்கெனவே விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக நேற்று மத்திய அரசு, கரோனாவால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ரூ.50000 நிவாரண நிதி வழங்குமென்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது.

SCROLL FOR NEXT