இந்தியா

கர்நாடகாவில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை: குதிரை பந்தயத்துக்கு மட்டும் விலக்கு

இரா.வினோத்

கர்நாடக சட்டப்பேரவையில் நேற்று உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா ‘கர்நாடக காவல் துறை திருத்த மசோ தாவை அறிமுகப்படுத்தினார்.

இதைத் தொடர்ந்து அவர் கூறியதாவது:

கர்நாடகாவில் செல்போன், கணினி உள்ளிட்ட மின்னணு சாதனங்களை கொண்டு நிறைய சூதாட்டங்கள் நடப்பதாக புகார்கள் உள்ளன. இதனால் ஏராளமானோர் லட்சக்கணக்கில் பணத்தைஇழந்துள்ள நிலையில், ஒரு சிலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தார்வாட் கிளை சமீபத்தில், ‘தற்போதுள்ள சட்டத்தை கொண்டு ஆன்லைன் சூதாட்டத்தை கையாள்வது காவல் துறைக்கு கடினமாக உள்ளது. எனவே காலத்துக்கு ஏற்றவாறு அரசு புதிய சட்டத்தை கொண்டுவர வேண்டும்’ என அறிவுறுத்தியது. அதன்பேரில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் ஆன்லைன் விளையாட்டுகள், வென்றால் பரிசு என்பது போன்ற போட்டிகள், பிற விளையாட்டுப் போட்டிகள் மீது பந்தயம் கட்டுதல், இன்ன பிற சூதாட்டங்கள் ஆகிய அனைத்தும் தடை செய்ய வழி செய்யப்பட்டுள்ளன.

சிறை, அபராதம்

இந்த திருத்தப்பட்ட சட்டத்தின் மூலம் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்க முடியும். மேலும் கைது செய்யப்படுவோர் ஜாமீனில் வெளிவர முடியாது. இந்த புதிய சட்ட மசோதாவில் குதிரைப் பந்தய போட்டிகளில் பந்தயம் கட்டுவதற்கு மட்டுமே விலக்கு அளிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார். இதையடுத்து இந்த மசோதா நிறைவேறியது.

SCROLL FOR NEXT