இந்தியா

கரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம் 30 நாட்களுக்குள் வழங்க வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல்

செய்திப்பிரிவு

கரோனாவால் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு 30 நாட்களுக்குள் மாநில அரசுகள் ரூ.50 ஆயிரம்நிவாரணம் வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

நாட்டில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. இதுவரை 4.45 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். கரோனாவால் உயிரிழந்தோருக்கு இதுவரை மத்திய, மாநில அரசுகள் எந்தவிதமான நிவாரண நிதியையும் அறிவிக்கவில்லை.

இந்நிலையில், இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணையில் இருந்தது. இந்த வழக்கில் மத்திய அரசு சார்பில் நேற்று பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு மாநில அரசுகள் ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்கவேண்டும் என்று மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது.

இதுதொடர்பாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிரமாணப் பத்திரத்தில் மத்திய அரசு சார்பில் கூறப்பட்டுள்ளதாவது:

கரோனாவால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு மாநில அரசுகள் ரூ.50 ஆயிரம் வழங்கத் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. பேரிடர்மேலாண்மை நிதியில் இருந்து இதை மாநில அரசுகள் வழங்கவேண்டும்.

மாவட்ட பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்தோ அல்லது மாவட்ட நிர்வாக அமைப்புகளின் மூலமோ இந்த நிதியை வழங்கலாம். இதுவரை ஏற்பட்ட கரோனா உயிரிழப்புகளுக்கு மட்டுமின்றி, மறு அறிவிப்பு வரும் வரை, வரும் காலங்களில் ஏற்படும் கரோனா உயிரிழப்புகளுக்கும் இந்த இழப்பீடு அறிவிப்பு பொருந்தும்.

அதேபோல் கரோனா நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட அல்லதுமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபடும் போது உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கும் இந்த இழப்பீடு வழங்கப்படும்.

கரோனா வைரஸால் தாக்கப்பட்டு மரணம் எனச் சுகாதாரத் துறை அமைச்சர் குறிப்பிட்ட மரணங்கள் அனைத்துக்கும் இந்த நிவாரணம் வழங்கப்படும். இது தொடர்பாகப் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தேவையான ஆவணங்களை, மாநில அரசுஅதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

இதை மாவட்ட தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர் சரிபார்த்து அதற்கான நிதியை வழங்க ஏற்பாடு செய்வர். தேவையான ஆவணங்களைச் சமர்ப்பித்த 30 நாட்களுக்குள் இது தொடர்பான அனைத்து உரிமைகோரல்களும் தீர்க்கப்பட வேண்டும், மேலும் ஆதார் இணைக்கப்பட்ட நேரடி பரிமாற்ற நடைமுறைகள் மூலம் நிவாரண நிதி வழங்கப்படும்.

இது தொடர்பான புகார்களை மாவட்ட துணை ஆட்சியரை கொண்டிருக்கும் மாவட்ட அளவிலான குழுவிடம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அளிக்கலாம். பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நிவாரண நிதி மறுக்கப்பட்டால், அதற்கான காரணத்தைத் தெளிவாகக் குறிப்பிடவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சில மாநிலங்களில் கரோனாவால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு நிதியை சம்பந்தப்பட்ட அரசுகள் ஏற்கெனவே அறிவித்துள்ளன. பிஹாரில் ரூ.4 லட்சம், மத்தியபிரதேசத்தில் ரூ.1 லட்சம், டெல்லியில் ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.-பிடிஐ

SCROLL FOR NEXT