கேரளாவின் மலப்புரம் அருகில் உள்ள தூத்தா கிராமத்தைச் சேர்ந்தவர் நாசர் (44). இவர் சவுதி அரேபியாவில் வேலைசெய்து வந்தார். கரோனா முதல் அலையின்போது கேரளா திரும்பிய நாசர், தான் சம்பாதித்த பணத்தில் பெரும்பகுதியை ஏழை, எளிய மக்களுக்காகச் செலவிட்டார்.
இந்நிலையில், ஏழைப் பெண்களின் திருமணத்துக்கும் உதவி செய்ய முன்வந்தார் நாசர். அப்போதுதான் மணநாளில் மணப்பெண்களுக்கான ஆடை எடுக்க வசதியில்லாமல் ஏழைப் பெண்கள் பலரும் சிரமப்படுவதை உணர்ந்தார். ஆனால் திருமண நாள் ஆடையை தங்களது திருமணநாளைத் தவிர்த்து வேறு எந்தவிசேஷங்களுக்கும் அணிந்துகொள்ளாத பலர் இருக்கிறார்கள். அதேநேரம் முகூர்த்தப்பட்டு, திருமண நாள் ஆடை என சிலர் அதை உணர்வுப்பூர்வமாக சேமித்து வைக்கும் கலாச்சாரம் மட்டுமே இருக்கிறது.
இதையெல்லாம் ஆழமாக உள்வாங்கிய நாசர், ஏழைப் பெண் களின் திருமணத்துக்கு உதவும் வகையில் ‘ஆடை வங்கி’ திட்டத்தை செயல்படுத்தி வருகிறார்.
இதுகுறித்து இந்து தமிழ் திசையிடம் நாசர் கூறும்போது, “பெற்றோர்கள் தங்கள் மகளின் திருமண ஆடைக்கு பணம் செலவுசெய்ய ரொம்பவும் தடுமாறும் சூழலைப் பார்த்தேன். மணநாளுக்கான ஆடைகளின் விலையோ மிகவும் உச்சத்தில் உள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் என் வீட்டிலேயே இதற்கென ஒரு அறையை ஒதுக்கினேன். என் மனைவி தொடங்கி சொந்த, பந்தங்கள் வரை முதல்கட்டமாக தங்கள் உடையை வழங்கினர்.
சமூகவலைதளங்களில் இதைப்பற்றி தொடர்ந்து பரப்புரை செய்தேன். இதனால் பல்வேறு பகுதியில் இருந்தும் பலர் அவர்களது திருமண ஆடைகளை அனுப்பி வைத்தனர். இப்போது என்னிடம் 600 திருமண ஆடைகள் உள்ளன. அதிகபட்சமாக ரூ.60 ஆயிரம் விலையுள்ள ஆடை வரை இங்கே உள்ளது.
மணமகள் வீட்டார் நேரடியாக இங்கே வந்துப் பார்த்து தங்களுக்குப் பிடித்த உடைகளை எடுத்துக்கொள்ளலாம். பயன் படுத்திய ஆடைகளை திரும்பகேட்பதில்லை. அதேநேரம் அவர்களாகவே கொண்டுவந்து கொடுத்தால் வாங்கிக் கொள்கிறோம். இப்போது கேரளம் முழுவதிலும் இருந்தும், கர்நாடகாவில் இருந்தும் பலர் வந்து ஆடைகளை பெற்றுச் செல்கின்றனர்” என்றார்.